பிரான்ஸில் திடீரென பள்ளிவாசல்களை சோதனை செய்ய திட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

பிரான்ஸில் திடீரென பள்ளிவாசல்களை சோதனை செய்ய திட்டம்! குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

பிரான்ஸில் பிரிவினைவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின் கீழ் 76 பள்ளிவாசல்கள் எதிர்வரும் நாட்களில் சோதனையிடப்படவிருப்பதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் கெரால்ட் டர்மானின் தெரிவித்துள்ளார்.

தலைநகர் பாரிஸ் பிராந்தியத்தில் 16 பள்ளிவாசல்கள் மற்றும் பிரான்ஸின் ஏனைய பகுதிகளில் 60 பள்ளிவாசல்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் இவைகளில் சிலது மூடப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதில் 18 பள்ளிவாசல்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைக்கான சுற்றறிக்கையை ஆளுநர்களுக்கு உள்துறை அமைச்சர் அனுப்பி இருப்பதாக பிரான்ஸின் லே பிகாரோ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாரிஸ் புறநகர் பகுதியில் கடந்த ஒக்டோபர் மாதம் ஆசிரியர் ஒருவர் தலை துண்டித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம் அமைப்புகள் மற்றும் பள்ளிவாசல்கள் மீதான சுற்றிவளைப்பு சோதனைகள் மற்றும் அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.

ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன் பதவிக்கு வந்தது தொடக்கம் 43 பள்ளிவாசல்கள் மூடப்பட்டிருப்பதாக கடந்த நவம்பரில் டர்மான் கூறி இருந்தார்.