சபரிமலையில் ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா

சபரிமலையில் தேவஸ்தான ஊழியர்கள் உள்பட மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசனை நடத்தி வருகிறது.

கொரோனா காரணமாக சபரிமலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது தினமும் 2 ஆயிரம் பக்தர்களும், சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பக்தர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

 

சபரிமலை அய்யப்பன் கோவிலின் வருவாய் இழப்பை கருத்தில் கொண்டு, திருவிதாங்கூர் தேவஸ்தானம் மற்றும் தலைமைச் செயலாளர் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரையின் பேரில் கூடுதல் பக்தர்கள் தரிசனத்திற்கு கேரள அரசு அனுமதி வழங்கியது. ஆனால் சுகாதாரத் துறை சார்பில் சபரிமலை தரிசனத்திற்கு கூடுதல் பக்தர்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

 

 

ஏற்கனவே சன்னிதான பணியில் இருந்த 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று மேலும் 16 தேவஸ்தான ஊழியர்கள், ஒரு காவலர் என மொத்தம் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதனை தொடர்ந்து சபரிமலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, சிறப்பு பணிக்காக சபரிமலைக்கு வந்துள்ள போலீசார் உள்பட அனைவருக்கும் கொரோனா மருத்துவ பரிசோதனையை மீண்டும் நடத்த சுகாதாரத்துறை தீர்மானித்து உள்ளது.

 

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாந்திகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க சன்னிதானத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வர தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.