பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பருத்தித்துறையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி!

பருத்தித்துறை ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

உறவினர் ஒருவரின் மருத்துவ சிகிச்சைக்காக கொழும்புக்குச் சென்று அங்கு ஒரு மாதம் தங்கியிருந்த நிலையில் வீடு திரும்பிய 34 வயதுடைய குடும்பத்தலைவருக்கே இவ்வாறு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சென்று திரும்பிய குறித்த நபர் குடும்பத்துடன் கடந்த 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில், குறித்த நபரின் மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட போதே தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் கோப்பாய் கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கோவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், அவரது குடும்பத்தினர் தொடர்ந்தும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 70 பேருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 336 பேருக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அவர்களில் ஒருவருக்கு மட்டும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.