முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை

முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை

புரெவி சூறாவளி முல்லைத்தீவு மற்றும் திருகோணமலைக்கு இடையில் தரையை தட்டி நேற்று (02.12.2020) 8.45 மணியளவில் இலங்கைக்குள் பிரவேசித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தச் சூறாவளி முல்லைத்தீவு ஊடாக நகர்ந்து மன்னார் ஊடாக இன்று அதிகாலை அரபிக்கடலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூறாவளி நாட்டை ஊடறுத்துச் செல்லும் என்பதால் நாட்டில் மினி சூறாவளி ஏற்படுவதற்கான வாய்ப்பிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

சூறாவளி காரணமாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 80 – 90 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை உயர்வதற்கு சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்தச் சூறாவளி காரணமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் காற்றுடனான கடும் மழை வீழ்ச்சி பாதிவாகியுள்ளதுடன் தொடர்ந்தும் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ,நேற்று காலை 8.30 மணி முதல் நேற்றிரவு 8.30 மணி வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு – அலம்பில் பகுதியில் 203.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.உடையார்கட்டு பகுதியில் 158 மில்லிமீற்றரும் வெலி – ஓய பகுதியில் 112 மில்லிமீற்றருமு; மழைவீழ்ச்சி இடம்பெற்றிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சூறாவளியின் தாக்கத்தினால் முல்லைத்தீவில் பலத்த காற்றுடன் கூடிய கடும் மழை பெய்து வருகின்றது. கனகாம்பிகைக்குளத்தின் நீர் மட்டம் 6 அடியாக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் கொக்குத்தெடுவாய் மகாவித்தியாலயம், கருநாட்டுக்கேணி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தற்காலிக தங்கியுள்ளனர்