லடாக்கில் தொடரும் பதற்றம் -இராணுவத்தினர் குவிப்பு
லடாக் பகுதியில் சீனாவுடனான பதற்றம் நீடித்துவரும் நிலையில் பெருமளவு இந்திய இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனா அதிக அளவிலான வீரர்களை கல்வான் பகுதிக்கு அனுப்பி வரும் வேளையில் இந்தியாவும் குறிப்பிடத்தக்க அளவு வீரர்களை அனுப்பி வருகிறது.
வியாழன் இரவு முதலே வீரர்கள் லடாக் பகுதிக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.இது தவிர எல்லையின் மற்ற பகுதிக்கும் வீரர்களை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.
மனாலி வழியாக லே செல்லும் சாலைகள் முழுமையாக இராணுவ பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு படை நகர்வு நடைபெற்று வருகிறது. ஆட்லரிகளை ட்ரக்குகள் கொண்டு செல்கின்றன.கிடைத்த தகவல்படி இராணுவம் புதிதாக பெற்ற M-777 இலகுரக ஆட்லரிகள் லடாக்கின் முன்னணி நிலைகளுக்கு நகர்த்தப்பட்டுள்ளன.
பஞ்சாப் மற்றும் ஹிமாச்சல் பகுதியில் இருந்து பல பிரிகேட்கள் மற்றும் என்ஜினியரிங் ரெஜிமென்டுகள் லடாக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளன. ஏற்கனவே இரண்டு டிவிசன்கள் படைப் பிரிவு கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டு மேலதிக படைகள் நகர்த்தப்பட்டு வருகின்றன.
இராணுவம் தவிர பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் முழுத் தயார் நிலையில் இந்திய விமானப்படை உள்ளது.புதிதாக இணைக்கப்பட்ட அப்பாச்சி வானூர்திகளும் லே-க்கு நகர்த்தப்பட்டுள்ளன.
அதிக உயரத்தில் பறக்கும் ஆற்றல் கொண்ட இந்த வானூர்திகளை கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்த முடியும்.