யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அரசாங்க அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று வரை 22 பேர் கொரோனா தாக்கத்திற்கு உட்பட்டுள்ளார்கள். அதனைவிட 1010 குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். 1010 குடும்பங்களைச் சேர்ந்த 2220 பேருக்கு அரசினால் வழங்கப்படுகின்ற நிவாரணம் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றோம்.

தற்போது மாவட்ட செயலகத்திற்கு 12.4மில்லியன் ரூபா கிடைத்துள்ளது.அந்த நிதியின் மூலம் நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றோம்.

இதனைவிட நாளாந்தம் தனிமைப்படுத்தப்படும் குடும்பங்களின் விபரங்களை உரிய இடங்களுக்கு அனுப்பி நிதியினை பெற்று நிவாரணப்பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றோம்.

இதனைவிட யாழ் மாவட்டத்தில் தற்பொழுது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோல இதர செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஆனால் அனைத்து செயற்பாடுகளும் சுகாதார வழிகாட்டல்களுக்கமைய செயற்படுத்தப்பட வேண்டும். இருந்தபோதிலும், பொது மண்டபங்கள் மற்றும் ஏனைய ஒன்றுகூடல்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது .

உணவகங்களை பொறுத்தவரை 50 வீதமான ஆசனங்களைப் பயன்படுத்தி உணவகங்களை செயற்படுத்த முடியும் அதே நேரத்தில் எடுத்துச் சென்று உண்ணுதல் நடைமுறையை பின்பற்றுமாறும் அறிவுறுத்தியுள்ளோம் .

இந்த நடைமுறையின் பிரகாரம் தற்பொழுது சுகாதாரப் பிரிவினர் யாழ்ப்பாண மாவட்டத்தினை கண்காணித்து வருகிறார்கள். போக்குவரத்தினை பொறுத்தவரைக்கும் மாவட்டங்களுக்கிடையிலான மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு எந்த தடையும் இல்லை. எனினும் பிற மாகாணங்களில் இருந்து வருபவர்கள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.

அண்மைய காலங்களில் யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து வெளிவந்தவர்களால் பரவி இருக்கின்றது. ஆகவே வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்களுடைய உண்மையான விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுகின்றோம்.

அநேகமான தகவல்கள் தற்பொழுது பரிசீலனை செய்யும்போது பெரும்பாலானவர்கள் பிழையான தகவல்களை வழங்கியுள்ளார்கள். வெளிமாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களுடைய சரியான தகவல்களை வழங்க வேண்டும்.

இது அவர்களை மாத்திரமல்லாது ஒரு சமூகத்தையே பாதிப்புக்குள்ளாக்கும் செயற்பாடாக அமைந்துவிடும் எனவே சுகாதாரப் பகுதியினர் அர்ப்பணிப்பாக செயற்படுகின்ற போதிலும் இவ்வாறான ஒரு சில நபர்கள் விடுகின்ற சில தவறான செயற்பாட்டின் காரணமாக அந்தப் பிரதேசமே பாதிக்க கூடிய நிலை காணப்படுகிறது.

எனவே இந்த விடயங்கள் தொடர்பில் வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் அதிக கரிசனை செலுத்த வேண்டும்.

தற்போதைய நிலையில் ஏனைய மாவட்டங்களை விட யாழ்ப்பாண மாவட்டம் சற்று கட்டுப்பாட்டில் காணப்படுகின்றது. எனினும் இனிவரும் காலங்களிலும் பொதுமக்கள் விழிப்பாக இருந்து இந்த கட்டுப்பாட்டினை தொடர்ந்து பேணுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருவோரை பொறுத்தவரை பொலிசார் அவர்களுடைய முழு விவரங்களையும் மாகாணத்துக்குள் நுழைகின்ற வழியில் அவற்றைப் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அறிகின்றோம். பொலிசார் அந்த விபரங்களை பெற்று சுகாதார பிரிவினருக்கு அறிவித்து இந்த செயற்பாட்டை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கின்றார்கள்.

எனினும் அவ்வாறான சந்தர்ப்பத்தில் சில பிழை ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தகவல்கள் கொடுக்கும் போது சரியாக கொடுக்க வேண்டும் என்பது தான் தற்போதைய நிலைப்பாடு . வழிபாட்டு இடங்களை பொறுத்தவரையில் அவற்றை உடனடியாக திறந்து விடுவதில் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளோம்.

மிக அண்மைய காலங்களில் பலத்த பாதுகாப்பற்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே ஓரிரு வாரங்களாவது பொறுமையாக கட்டுப்பாட்டுடன் தற்போது ஆலயங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஆலய செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். நிவர் புயல் தாக்கத்தின் பின்னர் இன்னுமொரு தாழமுக்கம் இலங்கையின் பகுதியாக வங்காள விரிகுடாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனுடைய தாக்கம் எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்குள் இலங்கையில் வடகிழக்கு பகுதியை நெருங்கும் அதன் தாக்கத்தினால் மழை அல்லது கடும் காற்று ஏற்படலாம் என கூறப்படுகின்றது. இது ஒரு புயலாக வலுமடையுமாக இருந்தால் அது அநேகமாக எங்களுடைய மட்டக்களப்புக்கும் முல்லைத்தீவுக்கும் இடையிலே கடக்கும் என முன் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனுடைய நிலைமை பற்றி அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவித்திருக்கின்றோம். அவர்கள் அதற்குரிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள். இது தொடர்பான முன்னேற்பாடுகள் அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலைமையை கருத்தில் கொண்டு கடற் தொழிலில் ஈடுபடுபவர்கள் கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருக்கிறோம். குறிப்பாக எதிர்வரும் 3 அல்லது 4 ஆம் திகதி வரை கடல் தொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்திருக்கின்றோம். எனவே கரையோரப் பகுதி மக்கள் இந்த விடயத்தில் மிகவும் அவதானமாக செயற்படுமென தெரிவித்தார்.