சிங்கப்பூரில் சிறைவைக்கப்பட்ட இலங்கை இளைஞனுக்கு கொரோனா
விசா அனுமதி காலம் முடிந்து சிங்கப்பூரில் தங்கியிருந்த நிலையில், நான்கு வாரம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையை இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த இளைஞர் கடந்த ஜனவரி 10 ஆம் திகதி சிங்கப்பூர் சென்றுள்ளார். விசா அனுமதி காலம் முடிந்த பின்னரும் அவர் சிங்கப்பூரில் தங்கியிருந்துள்ளமை கடந்த ஜூன் 12 ஆம் திகதி தெரியவந்துள்ளது. விசா அனுமதி காலம் முடிந்து சிங்கப்பூரில் தங்கியிருந்தமைக்காக அவருக்கு நான்கு வார சிறை மற்றும் மூன்று பிரம்படி தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அந்த இளைஞருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கடந்த 18 ஆம் திகதி கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிங்கப்பூர் சிறைச்சாலை நிர்வாகம்,
இலங்கை பிரஜைக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது ஆரம்பத்தில் தெரியவரவில்லை. அவரிடம் நோய் அறிகுறிகள் தென்படவில்லை. இதனால் அவருக்கு மருத்துவப் பரிசோதனை அவசியமாக இருக்கவில்லை என தெரிவித்துள்ளது.
எனினும் கடந்த 18 ஆம் திகதி அந்த இளைஞனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவருடன் தங்க வைக்கப்பட்டிருந்த மேலும் இரண்டு பேர் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இளைஞனின் உடல் நிலைமை குறித்து பரிசோதிக்க அவர் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் சிங்கப்பூர் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.