மது போதையில் நாக பாம்புடன் விளையாடிய நபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

மது போதையில் நாக பாம்புடன் விளையாடிய நபருக்கு ஏற்பட்ட விபரீதம்!

வல்வெட்டித்துறை வெளியன்தோட்டம் பகுதியில் நாக பாம்பு தீண்டி ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வல்வெட்டித்துறை வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் நாக பாம்பைப் பிடித்து விளையாடியுள்ளார். இதன் போது பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதில் 55 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நாக பாம்பைப் பிடித்து விளையாடிய சில நிமிடங்கள் கழித்து அதனை அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார். தூக்கத்திலிருந்து திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார்.

3 செம்பு தண்ணீரை அருந்திய அவர், மீண்டும் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அதனையடுத்து அவர் பருத்தித்துறை மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலை பரிசோதனையின் போது அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.