நடமாடும் மருத்துவ சேவைகளை நீடிக்க தீர்மானம்
கொழும்பு நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் பிரிவுகளில் முன்னெடுக்கப்படும் நடமாடும் மருத்துவ சேவைகளை அடுத்த மாதம் நடுப்பகுதி வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தேவைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிணங்க, இன்று தெமட்டகொடை, மிஹிதுசென்புர வீட்டுத்திட்டத்தை அண்மித்த பகுதியில் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
நாளை (01) பஞ்சிகாவத்தை பியசென செவன வீட்டுத்திட்டம் பகுதியிலும் , மருதானை லக்ஷிக்க செவன வீட்டுத்திட்ட பகுதியிலும் நடமாடும் மருத்துவ சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கிரேன்ட்பாஸ் ஜயமக வீட்டுத்திட்டம் பகுதியில் எதிர்வரும் 04 ஆம் திகதி நடமாடும் மருத்துவ சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட நடமாடும் மருத்துவ சேவைகளில் நான்காயிரத்திற்கும் அதிகமானோர் சேவைகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, COVID-19 தொற்றினால் வீடுகளில் உயிரிழப்போரின் வீதத்தை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்காக, 1990 அம்பியூலன்ஸ் சேவை தவிர்ந்த பிறிதொரு அம்பியூலன்ஸ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
மட்டக்குளி வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நிலையத்தில் இருந்து சேவை முன்னெடுக்கப்படுகின்றது.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இரு குழுவினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவினர் அனைவரின் சுகாதார நிலைமை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஏதேனும் நோய் நிலைமை ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.