பசில் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டிருந்த பயணத் தடை நீக்கம்
பஞ்சாங்கம் அச்சிடப்பட்டமை, GI குழாய் வழக்கில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும அபிவிருத்தி திணைக்கள முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் குறித்த இருவருக்கும் எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த இரண்டு வழக்குகள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இதன்போது, பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடையை நீக்குவதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க கனேபொல மற்றும் தமித் தொட்டவத்த ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமையவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்கு சொந்தமான 1 கோடியே 94 இலட்சம் ரூபாவை பயன்படுத்தி 50 இலட்சம் பஞ்சாங்கங்களை அச்சிட்டு விநியோகித்தமை மற்றும் திவிநெகும திணைக்களத்திற்கு சொந்தமான 365 இலட்சம் ரூபாவை பயன்படுத்தி அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் நோக்கில் GI குழாய்களை கொள்வனவு செய்து விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மா அதிபர் இந்த வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை, கூரைத்தகடுகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கின் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நான்கு பிரதிவாதிகளையும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விடுவித்தது.