அம்மாவை சந்திக்க போனார்... சந்திக்க வந்தது கொரோனா - பத்திரிகையாளரின் அனுபவங்கள்
ரோலர் கோஸ்டரில் நீங்கள் சவாரி போனதுண்டா?
சில நேரங்களில் மனித வாழ்க்கையும் அப்படிப்பட்டதாகி விடுகிறது. ‘த்ரில்’லான அற்புத தருணங்களும், அச்சமூட்டும் கடினமான தருணங்களும் மாறி மாறி வரும்.
அவர் பெயர் மாணிக் குப்தா. 27 வயதே ஆன பத்திரிகையாளர். தலைநகர் டெல்லியில் முன்னணி செய்தி நிறுவனத்தில் வேலை. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் ஜம்முவில் உள்ள தனது தாயை ஒரு நடை போய் பார்த்து விட்டு வந்து விட வேண்டும் என்று மனசு ஏங்கியது.
அதை அவர் செயல்படுத்த முனைந்தார். டெல்லியில் இருந்து ஜம்முவுக்கு சென்றார். அங்கேதான் சோதனை தொடங்கியது. சென்ற இடத்திலே அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை தனிமைப்படுத்தினார்கள்.
அந்த அனுபவம் எப்படி வாய்த்தது அவருக்கு? அவரே சொல்கிறார் இப்படி.....
“ ஒரு அதிகாலை நேரம்.. 6.30 மணி... செல்போன் ஒலித்தது. மறுமுனையில் குரல் ஒலித்தது... மன்னிக்க வேண்டும். உங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது”. அமைதியாகவும், கண்ணியமாகவும் தகவல் சொன்னார்கள். ஒரு பக்கம் அதிர்ச்சி, மற்றொரு பக்கம் பீதி. ஆமாம், இது உண்மைதானா? என்னை நானே கிள்ளிப்பார்த்தேன். வலித்தது. ஆமாம். உண்மைதான் என உணர்ந்து கொண்டேன்.
அது மே மாதம் 25-ந் தேதி. முதலில் ஒரு நண்பரிடம் தகவல் சொன்னேன். அடுத்து அலுவலகம். அடுத்து என் மாமா.. ஏற்கனவே கவலைகளால் வாடும் அம்மாவுக்கு, அதுவும் தன் ஒற்றைப்பிள்ளைக்கு கொரோனா, உயிரையும் பறிக்க வாய்ப்புள்ள கொரோனா என்று செய்தி கிடைத்தால்? ம்கூம். அம்மாவிடம் சொல்லக்கூடாது. அம்மா தாங்கிக்கொள்ள மாட்டார்.... முடிந்தவரையில் மறைத்து விட வேண்டும் என்று எல்லோரும் முடிவு எடுத்தோம்.
சில தினங்களுக்கு முன்புதான் ஒரு கொரோனா நோயாளியை பேட்டி கண்டு எழுதி இருந்தேன். இப்போது நானே ஆம்புலன்சுக்காக காத்திருக்கும் கொரோனா நோயாளி ஆனேன்.
எனக்குள் கேள்விகள் அலையடித்தன. எனக்கு எப்படி இந்த பாழாய்ப்போன கொரோனா வந்தது? எனக்கு இதை பரப்பிவிட்டது யார்? மளிகை பொருட்களை டெல்லியில் என் வீட்டுக்கு கொண்டு வந்த கடைக்கார பையனா? நான் பேட்டி கண்ட இடம் பெயர்ந்த தொழிலாளியா? ரெயிலில் உடன் வந்த பயணிகளில் யாருமா? அது சரி, இந்த பரிசோதனை முடிவு சரியானதுதானா?
அடுத்த சில மணி நேரத்தில் என்னை நான் தனிமைப்படுத்தி இருந்த ஓட்டல் அறையில் இருந்து அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டேன். ஒரு பத்திரிகையாளனுக்கு அந்த அரசு ஆஸ்பத்திரி, செய்திகளை வாரி வழங்கக்கூடிய தங்கச்சுரங்கம். ஆனாலோ என் நிலை, எத்தனையோ கொரோனா நோயாளிகளில் நானும் ஒருவன் என்பதல்லவா?
அந்த வார்டில் என்னோடு மேலும் 8 பேர்... டாக்டர்கள் உள்பட யாரும் அங்கு வர மாட்டார்கள் என அறிந்தேன். கேமரா வழியாக டாக்டர்கள் கண்காணிப்பாளர்கள் என தெரிந்துகொண்டேன். எல்லோரிடமும் ஒரு பயத்தை நான் உணர்ந்தேன்.
அந்த நேரம் செல்போன் ஒலித்தது. அழைத்தவர் அம்மா. செல்போனில் அவரது விசும்பலைத்தான் கேட்க முடிந்தது. சிறிய நகரங்களில்கூட செய்திகள் வேகமாக பரவுகின்றன. ஆனால் கொரோனா செய்தியோ மின்னல் வேகத்தில் பரவி விடுகிறது என்பதை ஒரு பத்திரிகையாளனாக உணர்ந்தேன். ஊரெங்கும் தகவல் பரவ அம்மாவுக்கும் கிடைத்திருக்கிறது.
அதன் பின்னர் என் செல்போன் ஒலிப்பதை நிறுத்தவில்லை. நண்பர்கள், சகாக்கள் என... எனக்கு கொரோனா வைரஸ் பரவிய செய்தி வைரலானது.
இதற்கு மத்தியில் வேறு ஆஸ்பத்திரிக்கு நகர்ந்து விட நினைத்தேன். மறுநாளிலே அங்குள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டேன். அதற்கு என் சகாக்களும், நண்பர்களும் உதவினார்கள். ஆனால் ஒரு இரவு மட்டுமே அங்கு தங்கினேன். குளியலறையுடன் கூடிய ஒற்றை அறை என்னும் என் கனவு அங்கு நனவாகவில்லை.
மறுநாளில் 5-வது வார்டில் உள்ள மகப்பேறு வார்டுக்கு இட மாற்றம்.
இணைக்கப்பட்ட குளியலறை... குளுகுளு வசதி.. சிலிர்த்தேன். ஆனால் அங்கு நான் மட்டும் தனியாக. டாக்டர்கள், நர்சுகள், சுகாதார உதவியாளர்கள், நோயாளிகள் யாரும் கிடையாது. அடுத்த 12 நாட்கள் அப்படியாக கழிய வேண்டியதிருந்தது. 2 முறை மட்டுமே டாக்டர் வந்தார். 2 வார முடிவில் ஆய்வக உதவியாளர் வந்து கொரோனா பரிசோதனை செய்து விட்டுப்போனார். மற்றபடி யாருடனும் தொடர்பில்லை. தனித்தீவு வாழ்க்கை.
வீட்டில் இருந்து உணவு வந்து கொண்டிருந்தது. லிப்டில் என் வார்டுக்கு அனுப்பப்படும். போய் எடுத்துக்கொள்வேன். அந்த தளத்தை சுத்தம் செய்ய வருவார்கள். என் அறைக்குள் வர மாட்டார்கள். சுய பச்சதாபத்தில் மூழ்கிப்போனேன். ஒரு டாக்டர் சினேகிதி உணர்த்தினார், சிரிப்புதான் அனேக தருணங்களில் அற்புதமான மருந்து என்று. என்னை நான் மாற்றினேன்.
அந்த தளத்தில் நான் மட்டும்தான் இருந்தேன் என்பது வசதியாகிப்போனது. வெற்று தாழ்வாரத்தில் நடனமாடினேன். நினைப்பாலே கிரிக்கெட் ஆடினேன். 2003 உலக கோப்பையில் சச்சின் அடித்தது போல சிக்சர் அடித்தேன். எனக்குள் நம்பிக்கை வலுத்தது. கொரோனா வைரசை நாக்-அவுட் செய்து விட முடியும் என்று நம்பிக்கை வளர்த்தேன். 14 நாட்கள் நிறைவடைந்தன.
அது ஜூன் -7. அதிகாலையில் தொலைபேசி அழைப்பு. கொரோனா வைரஸ் தொற்று போய்விட்டது என தகவல் வந்தது.
வீடும் அழைத்தது. அம்மாவும் அழைத்தார். நான் என் அம்மாவை இனி சந்திப்பேன். தடை ஏதும் இல்லை!” என்கிறார் மாணிக் குப்தா.
இதுதான் கொரோனாவின் விளையாட்டு.
நம்பிக்கையோடு எதிர்கொண்டால் கொரோனாவை வீழ்த்துவது ஒன்றும் கடினமல்ல. வாழ்க்கை ரோலர் கோஸ்டர் என்றாலும், அதிலும் ஆனந்தமும் வாய்க்கத்தானே செய்கிறது?!