
யாழில் கொரோனா அச்சம்! முடக்கப்படுகிறதா காரைநகர் பிரதேச செயலகம்?
காரைநகர் பிரதேச செயலக பிரிவை தனிமைப்படுத்தும் தீர்மானம் இன்று காலை வரை எடுக்கப்படவில்லை என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றாளருடன் தொடர்புடையவர்களை சுகாதாரத் துறையினர் தேடி வருகின்றனர் என்றும் இன்று மாலை அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
காரைநகரில் இன்று சனிக்கிழமை காலை 8 மணிவரை 36 குடும்பங்கள் வீடுகளில் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சில வர்த்தக நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.
கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையினரின் கள நிலமைகளை ஆராய்ந்து இன்று மாலை அடுத்தகட்ட நவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.