மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் அமெரிக்காவில் கைது : நாடு கடத்துமாறும் கோரிக்கை!!

மும்பை தாக்குதலுடன் தொடர்புடையவர் அமெரிக்காவில் கைது : நாடு கடத்துமாறும் கோரிக்கை!!

மும்பையில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய குற்றவாளி தஹாவூர் ராணா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளதாகவும்  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வழக்குறைஞர் ஜோன் ஜே லுலேஜியன், “1997 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்படைப்பு ஒப்பந்தத்தின்படி  தஹாவூர் ராணாவை ஒப்படைக்கும் நோக்கில் கைது செய்யுமாறு இந்திய அரசு கோரியுள்ளது. இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்வதற்கான சதி திட்டம் தீட்டுதல் உட்பட பல குற்றங்களுக்காக தஹாவூர் ராணா மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது” எனக் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தஹாவூர் ராணா மீதான விசாரணையை கலிபோர்னியாவின் மாவட்ட நீதிமன்றம் எதிர்வரும் 30 ஆம் திகதி மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது குறித்த மனுவினை ஜுன் மாதம் 22 திகதிக்குள் சமர்பிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகள் முடிவடைந்தால் தஹாவூர் ராணா விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ம் திகதி  மும்பை நகரத்தில் தாஜ் ஹோட்டல் உட்பட பல இடங்களில் லஷ்கர்- இ- தொய்பா பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் கடுமையான தாக்குதலை நடத்தினர்.

இந்த கொடூரத் தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். மேலும் 240க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.  இந்த சம்பவம் தொடர்பாக கனடா நாட்டைச் சேர்ந்த பாகிஸ்தானியரான  தஹாவூர் ராணா கடந்த 2009 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு , கொரோனா காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதனையடுத்தே இந்தியா அமெரிக்காவிடம் மேற்படி கோரிக்கையினை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.