யாழ். பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

யாழ். பல்கலை மாணவனின் மரணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம்! நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்த வீட்டை சுற்றி உள்ள சி.சி.டிவி கெமராக்களின் பதிவுகளையும் மாணவன் பாவித்த கையடக்கத் தொலைபேசியின் உரையாடல் பதிவுகளையும் ஆராயுமாறு யாழ்ப்பான நீதிவான் நீதிமன்றம் பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த மாணவனின் வழக்கு நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றில் நடைபெற்ற போதே மன்று மேற்படி கட்டளையை பிறப்பித்தது.

கடந்த வாரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில் பலத்த சந்தேகங்கள் இருப்பதாக உறவினர்களால் தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மாணவரின் சகோதரன் நீதி கோரி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மாஅதிபர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றையும் அண்மையில் அனுப்பியிருந்தார்.

இவ்வாறான நிலையில் யாழ்.நீதிமன்றில் நடைபெற்ற வழக்கில் மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் அது தொடர்பான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவனின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் மன்றில் தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதவான் மாணவன் வசித்த வீட்டை சுற்றியுள்ள இடங்களில் சி.சி.டிவி கமரா இருந்தால் அதன் ஒளிப்பதிவை எடுக்குமாறும் அதேநேரம் மாணவனின் கையடக்கத் தொலைபேசி பதிவுகளையும் ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.