முல்லைத்தீவில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

முல்லைத்தீவில் மாவீரர் நாள் அனுஸ்டிப்பு தொடர்பில் நீதிமன்றின் அறிவிப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை செய்ய முடியுமா அல்லது அதற்கு தடை உத்தரவு நீடிக்கப்படுமா என்ற முல்லைத்தீவு மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பு மிக்க தீர்ப்பு இன்று வழங்கப்படும் என எதிர்பார்த்திருந்த வேளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்று அறிவித்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்று, கடந்த 20.11.2020 அன்று, மாவீரர் தினம் மேற்கொள்வதற்கு 46 பேருக்கு தடை உத்தரவினைப் பிறப்பித்திருந்தது.

இவ்வாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தடைக்கட்டளையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி , தடைக்கட்டளை வழங்கப்பட்டவர்கள் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராஜா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட பதின்நான்கு பேர் கொண்ட குழுவினரால் 23.11.2020 நகர்த்தல் பத்திரம் (மோசன்)தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் 23.11.2020 அன்று இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகளில் மாவீரர் நாளுக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டோருக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், புரந்திரன் எஸ்.தனஞ்சயன், ருஜிக்கா நித்தியானந்தராஜா, திருமதி துஷ்யந்தி சிவகுமார், ஹாரிஸ், உள்ளிட்ட சட்டவாளர்கள் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

இந்நிலையில் பாதிக்கப்படடவர்கள் சார்பாக மன்றில் முன்வைக்கப்பட்ட விடயங்களை கேட்ட நீதிபதி வழக்கின் கட்டளையை வழங்க வழக்கினை இன்றைய திகதிக்கு தவணையிட்டிருந்தார். இதன் போதே இன்றைய தினமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக நீதிமன்றால் அறிவிக்கப்பட்டுள்ளது