
கல்விக்கு வறுமை தடையல்ல: சாதித்துக் காட்டிய முல்லை.மாணவி - சட்டத்தரணியாவதே இலட்சியம்
நாட்டில் யுத்தம் நிறைவடைய முன்னரான காலப்பகுதியில் குப்பி விளக்குகளில் கல்வி கற்று தமிழ் மாணவர்கள் பல்வேறு சாதனைகள் நிலைநாட்டியமை நாம் அனைவரும் அறிவோம்
ஆனால் யுத்தம் நிறைவடைந்து பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு மாணவர்களின் கல்விகற்றல் செயற்பாடுகளில் பல்வேறு பரிணாமங்கள் கண்டுள்ள இன்றைய நிலையிலும் யுத்தம் நிறைவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் வீட்டிற்கு மின்சார இணைப்பு கூட இல்லாத நிலையிலும் குப்பி விளக்கில் கல்வி கற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் நிலைபெற்ற சாதித்துள்ளார். உடையார்கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவி.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உடையார் கட்டு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 5ஆம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் 13 மாணவர்கள் சித்தியடைந்துள்ளார்கள்.
இவர்களில் நிசாந்தன் நிதர்சனா என்ற மாணவி 194 புள்ளிகளை பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டாம் இடத்தில் சாதனை படைத்துள்ளார்.
நாளாந்தம் கூலிதொழில் செய்து வாழ்ந்து வரும் குடும்பத்தில் முதற் பிள்ளையாக பிறந்த இவர். சிறுவயதில் இருந்து பாடசாலையில் இடம்பெறும் பரீட்சைகளில் முதல் நிலையினை பெற்று பாடசாலையில் போட்டிகளிலும் வெற்றி பெற்று பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட குரவில் பகுதியில் வாழ்ந்து வரும் இந்த மாணவியின் வீட்டிற்கு இதுவரை மின்சார இணைப்பு பெற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டில் இருந்து 50 மீற்றர் தொலைவு வரை மின்சார இணைப்பு வந்துள்ள போதும் இவர் மின்சார வசதி இல்லை. இவர் குப்பி விளக்கில் கல்விகற்று சித்தியடைந்துள்ளார்.
எந்த வித பிரத்தியேக வகுப்புக்களுக்கும் செல்லாமல் பாடசாலை கல்வியும் வீட்டுக்கல்வியுமாக கல்விகற்று வந்த மாணவி கொரோனா காலத்தில் பாடசாலை இல்லாத நிலையில் தொலைபேசி ஊடாக ஆசிரியர்கள் அனுப்பும் வினாப்பத்திரங்களை சரியா படித்து விடை எழுதியதுடன் சந்தேகங்களை பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் கேட்டு கல்வி கற்றுள்ளார்.
எதிர்காலத்தில் தான் சட்டத்தரணியாக வந்து கிராமத்தில் பணிசெய்யவேண்டும் என்றும் நிதர்சனா தெரிவித்துள்ளார். குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். குறித்த மாணவியின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்கு நல்லுள்ளம் படைத்தவர்கள் உதவ முன்வரவேண்டும்.