தமிழகத்தை நோக்கி நகரும் 'நிவர்' சூறாவளி- 36 மணித்தியாலங்களில் தமிழக கரையை கடக்கவுள்ளதாக தகவல்

தமிழகத்தை நோக்கி நகரும் 'நிவர்' சூறாவளி- 36 மணித்தியாலங்களில் தமிழக கரையை கடக்கவுள்ளதாக தகவல்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் விருத்தியடைந்த “NIVAR” என்ற சூறாவளியானது இன்று (24) 08.30 மணிக்கு காங்கேசந்துறை கரைக்கு கிழக்காக ஏறத்தாழ 325 கி.மீ தூரத்தில் வட அகலாங்குகள் 10.0N இற்கும் கிழக்கு நெடுங்கோடுகள் 83.0E இற்கும் இடையில் நிலை கொண்டுள்ளது.

இது அடுத்த 36 மணித்தியாலங்களில் ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழ்நாடு கரையைக் கடக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத் தொகுதியின் தாக்கம் காரணமாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் மிகப் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பல இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும், ஊவா மாகாணத்தில் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.