கூட்டமைப்பு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும்! மாவை சேனாதிராஜா நம்பிக்கை
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதிகளை பாதுகாப்பதற்கு அக்காலப்பகுதியில் மண்டூர் மகேந்திரன் பல்வேறு அர்ப்பணிப்பான உதவிகளை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தலில் எந்த அரசாங்கம் அமையப்போகின்றது என்று தெரியாது. எனினும் எந்த ஆட்சியமைகின்றது என்று பார்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அந்த சந்தர்ப்பத்தில் தீர்மானிக்கும்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும். தமிழ் தேசிய கூட்டமைப்பினை வெற்றிபெறச்செய்ய வேண்டும் என்பதில் வடகிழக்கு தமிழ் மக்கள் உறுதியாகவுள்ளனர்.
அந்தவகையில் எமது செயற்பாடுகள் தொடர்பில் ஆதாரபூர்வமான பிரசாரங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் ஆயத்தமாகவுள்ளோம். மண்டூர் மகேந்திரனை நான் இளமைக்காலம் முதல் அறிந்திருக்கின்றேன்.
அவர் நான்கு முறை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக இருந்த பெருந்தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் உறவினர். அத்துடன், இலங்கை தமிழரசுக்கட்சியின் குடும்பத்தில் ஒருவராக அன்று தொடக்கம் பல கட்சிகளில் இருந்து தன்னை அர்ப்பணித்த ஒருவர்.
1972ஆம் ஆண்டு சிறிமா ஆட்சிக்காலத்தில் புதிய அரசியலமைப்பினை கொண்டுவந்தபோது அதற்கு எதிராக நாங்கள் பல போராட்டங்களை நடாத்தியபோது அவரது செயற்பாடுகள் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலம் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.