கோட்டாபய சற்று குரலை உயர்த்தி கதைத்தால் அது அரச ஊழியர்களை அச்சுறுத்துவதா? மகிந்த கேள்வி
மத்திய வங்கியின் ஆளுநர், அதிகாரிகளை ஜனாதிபதி அச்சுறுத்தவில்லை அதற்கான தேவையும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
குருநாகல் மாவட்டத்தில் இன்று இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று குரலை உயர்த்தி அரச அதிகாரிகளுடன் கதைக்கும் போது அரசாங்கம் அரச ஊழியர்களை அச்சுறுத்துவதாக குறிப்பிடுகிறார்கள்.
ஜனாதிபதி அமைச்சரவையின் பிரதானி என்ற பதவியில் இருந்துகொண்டு மத்திய வங்கியிள் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தற்போது வங்கி நிர்வாகம் முறையாக செயற்படுகிறது. இதன் பயனை மக்களே பெறுகிறார்கள்.
உள்ளக பிரச்சினையின் காரணமாக குடும்பம் மற்றும் அரசியல் கட்சி பிளவுபட்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும். வரலாற்று பின்னணியை கொண்ட ஐக்கிய தேசிய கட்சி இன்று இரண்டாக பிளவுபட்டுள்ளது.
இதற்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ பொறுப்பு கூறவேண்டும். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட தேர்தல் பிரசார கருத்துக்கள் மீண்டும் பொதுத்தேர்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நகைச்சுவையான பிரசாரங்களை முன்னெடுப்பது முக்கியமல்ல. மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்.
நாட்டுக்கும் , ஊருக்கும் சேவையாற்றுபவர்களை பாராளுமன்றத்துக்கு இம்முறை தெரிவு செய்யுங்கள். அதிகார முரண்பாடுகளினால் கடந்த அரசாங்கம் செயற்பட்ட விதத்தை மக்கள் நன்கு அறிவார்கள்.
முறையற்ற செயற்பாடுகள் அனைத்து துறைகளையும் பலவீனப்படுத்தியது. 2015ம் ஆண்டு பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த அரசாங்கத்தையே ஒப்படைத்தோம். 2019ம் ஆண்டு பலவீனமான பொருளாதார நிலையினை கொண்ட அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளோம்.
பாராளுமன்றத்தின் பதவிக் காலம் நான்கரை வருடங்கள் பூர்த்தியாகும் வரை பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என்ற அரசியலமைப்பின் ஏற்பாட்டின் காரணமாக நிலையான அரசாங்கத்தை எம்மால் ஸ்தாபிக்க முடியாமல் போனது.
இதனை எதிர் தரப்பினர் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசாங்கம் கடந்த பெப்ரவரி மாதம் அரச நிர்வாக செலவுகளுக்காக பாராளுமன்றத்தில் கொண்டு வந்த கடன் பெறும் எல்லையை அதிகரிக்கும் பிரேரணையை எதிர்த்தார்கள் என மேலும் தெரிவித்தார்.