நேற்றைய தினம் பதிவான நான்கு கொரோனா மரணங்களுக்கான காரணங்கள் வெளியாகின
நாட்டில் கொவிட் 19 தொற்று காரணமாக நேற்றைய நாளில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றின் மூலம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய நாளில் பதிவான நான்கு மரணங்களும் கொழும்பு மாவட்டத்தில் சம்பவித்துள்ளன.
இரண்டு ஆண்களும், இரண்டு பெண்களும் கொவிட்-19 தொற்றினால் மரணித்தனர்.
மூன்று பேரின் மரணங்கள் வைத்தியசாலைகளிலும், ஒருவரின் மரணம் வீட்டிலும் சம்பவித்துள்ளது.
கொழும்பு 15 பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கொவிட்-19 நிமோனியா நிலைமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதான ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 20ஆம் திகதி உயிரிழந்தார்.
நாள்பட்ட நுரையீரல் நோய், கொவிட் 19 தொற்றுக்குள்ளானதினால் அதிகரித்தமையே அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 84 வயதான பெண் ஒருவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் உயிரிழந்தார்.
கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நிமோனியா நிலைமை அவரின் மரணத்திற்கான காரணமாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர், கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் நேற்றைய தினம் அவர் உயிரிழந்தார்
கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா நிலை அதிகரித்தமை அவரின் மரணத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.