நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாமா???
நாளை நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது, பார்த்தால் கண்களுக்கு பாதிப்பு வரும் என விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர். நாளை நடைபெற இருப்பது வளைய சூரிய கிரகணம். இது முழு சூரிய கிரகணம் இல்லை. இது தமிழகத்தில் நாளை காலை 10.22 மணிக்கு முழுமை நிலை அடையும். இருப்பினும் தமிழகத்தில் இந்நிகழ்வை குறைவாகத்தான் பார்க்க முடியும். 34 விழுக்காடு அளவிற்கே தமிழகத்தில் தெரியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் வெறும் கண்களால் இந்த சூரிய கிரகணத்தைப் பார்க்க வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.
நாளை பூமி தனது சுற்றுப்பாதையில் சூரியனையும் நிலவு தனது சுற்றுப்பாதையில் பூமியையும் சுற்றி வரப் போகிறது. இதனால் பூமி, சூரியன், நிலவு மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சந்தித்துக் கொள்ள இருக்கின்றன. சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் நிலவு இருக்கும். அதனால் சூரிய ஒளியை நிலவு மறைத்துக் கொண்டு நிலவின் பிம்பம் மட்டுமே பூமியில் படும். இந்நிகழ்வை சூரிய கிரகணம் எனக் குறிப்பிடுகின்றனர். நிலவு சூரியனை மத்தியில் மறைப்பதால் வளையம் போன்ற அமைப்பு தோன்றும் அதனால் இது வளைய சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் சூரியக் கிரகணத்தை இணையத்தில் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.iiap.res.in என முகவரியில் இதைப்பார்த்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.