டெல்லியில் சுய அக்கறையற்ற மக்கள்; சோதனை சாவடிகளில் மட்டுமே முக கவசங்களை அணியும் அவலம்

டெல்லியில் சுய அக்கறையற்ற மக்கள்; சோதனை சாவடிகளில் மட்டுமே முக கவசங்களை அணியும் அவலம்

நாட்டின் தலைநகர் டெல்லியில் பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது, கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  இதேபோன்று டெல்லியில் காற்று மாசு அளவும் அதிகரித்து காணப்படுகிறது.

 

 

டெல்லியில் காற்று தர குறியீடு உயர்ந்துள்ளதுடன், அதிகாலையில் பனி அடர்ந்து தெளிவற்ற வானிலையும் காணப்படுகிறது.  இந்நிலையில், டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6,608 பேருக்கு கொரோனா  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

இதனால் டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5.17 லட்சம் ஆக உயர்ந்துள்ளது.  8,159 பேர் இதுவரை உயிரிழந்து உள்ளனர்.  இந்த நிலையில், டெல்லி லெப்டினன்ட் கவர்னர் அனில் பைஜால் கொரோனா வைரசுக்கான ஒழுங்குமுறை 2020க்கான டெல்லி தொற்று நோய் மேலாண் திருத்த அறிவிப்பினை நேற்று வெளியிட்டார்.

 

இதன்படி, தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கியிருப்போர் விதிகளை மீறினாலோ, சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், பொது இடங்களில் முக கவசங்களை அணிதல் ஆகியவற்றை பின்பற்றாமல், கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபட்டாலோ, பொது இடங்களில் பான்மசாலா, குட்கா போன்ற பொருட்களை உட்கொண்டாலோ அவர்கள் மீது அரசு அங்கீகாரம் பெற்ற நபர்கள் ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்க அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

எனினும், டெல்லியில் இருப்பவர்களில் சிலர் இதுபற்றி சிறிதும் கவனம் கொள்ளவில்லை.  இதனை முன்னிட்டு, டெல்லி முதல் நொய்டா வரை செல்லும் சாலையின் எல்லை பகுதியில் அதிகாரிகள் இன்று பயணிகளிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

ஆனால், டெல்லியில் சுய அக்கறையின்றி சோதனை சாவடிகளில் மட்டுமே முக கவசங்களை மக்கள் அணியும் அவலம் காணப்படுகிறது.  இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பதற்கான புதிய வழிகாட்டி நெறிமுறைகள் எங்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன.

 

ஆனால், மக்கள் வழக்கம்போல் செல்கின்றனர்.  சாவடிகளை நெருங்கும்பொழுது மக்கள் முக கவசங்களை அணிந்து கொள்கின்றனர் என கூறியுள்ளார்.