யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைகூர அனுமதிகோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..!

யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைகூர அனுமதிகோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..!

போர்காலத்தில் உயிரிழந்தவர்களை அவர்களது உறவினர்கள் நினைவுக்கூர அனுமதிக்க கோரி, யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினால் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தேசிய பாதுகாப்புடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதால், அந்த மனுவை விசாரணை செய்வதற்கான அதிகாரம் இந்த நீதிமன்றுக்கு இல்லை என்று தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்திருப்பதாக, எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

முந்தைய பதிவு.

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வினை தடை செய்வதற்கான நடவடிக்கை எடுக்க கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனுக்கள் மீதான விசாரணை தற்சமயம் இடம்பெறுகின்றது.

அந்த மனுவின் பிரதிவாதிகளாக வட மாகாண சிரேஸ்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் பி.பி.எஸ்.எம். தர்மரட்ண, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன

இந்த நிலையில் அவர்கள் இன்றைய தினம் யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

அதேநேரம், மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் மற்றும் சட்டத்தரணிகளான மணிவண்ணன், சயந்தன் ஆகியோரும் மன்றில் பிரசன்னமாகியுள்ளனர்

யுத்தத்தில் உயிரிழந்த தமது பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளையோ சுட்டிக்காட்டி, எதிர்வரும் நவம்பர் 25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதிவரையில் இடம்பெறவுள்ள நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது என்று அந்த மனுவில், மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்

இதற்கான உத்தரவை மனுவின் பிரதிவாதிகளுக்கு வழங்குமாறு அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

மனுதாரர்களில் ஒருவரான வல்வெட்டித்துறை கம்பர் மலையைச்சேர்ந்த சின்னத்துரை மகேஸ்வரி, தனது மகன் சின்னத்துரை ரவீந்திரன் 1985 ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி யுத்தத்தில் உயிரிழந்தார் என்றும் அவரை நினைகூரும் வகையில் அனுமதியளிக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியுள்ளார்.