லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரை ஒகஸ்ட் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடரை ஒகஸ்ட் மாதம் நடத்துவதற்கு திட்டம்!

‘லங்கா பிரீமியர் லீக்’ ரி-20 தொடரை மீண்டும் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

உள்ளூர் செய்தித்தாள்களில் விளம்பரதாரர்களுக்கு அழைப்பு விடுத்து இன்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்ட விளம்பரத்தின் ஊடாக இந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் நடைபெற்றுவரும் ஏனைய பிரீமியர் லீக் ரி-20 தொடர்களைப் போலவே இத்தொடரிலும் இலங்கை மற்றும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த பிரபல்யமிக்க வீரர்களை இணைத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கையில் நடைபெறும் ரி-20 தொடரில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களுடன் ஆறு அணிகள் இடம்பெறும்.

16 போட்டி நாட்களில் 23 போட்டிகள் விளையாடப்படும். அதே நேரத்தில் ஒரு அணி அதிகபட்சம் 6 வெளிநாட்டு வீரர்களைக் கொண்ட 16 வீரர்களைக் கொண்ட அணியைத் தேர்வு செய்யலாம்.

லங்கா பிரீமியர் லீக் ரி-20 தொடர் (எல்.பி.எல்) எதிர்வரும் ஒகஸ்ட் 15ஆம் திகதி முதல் செப்டம்பர் 4ஆம் திகதி வரை விளையாட முன்மொழியப்பட்டுள்ளது.