அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக தமிழர் நியமனம்!

அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக தமிழர் நியமனம்!

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராக இந்திய-அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்ற சென்னையைச் சேர்ந்த தமிழரை அமெரிக்க செனட் தெரிவுசெய்துள்ளது.

அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, 58 வயதாகும் பஞ்சநாதன் அமெரிக்காவின் முன்னணி அறிவியல் நிதி ஒதுக்கீடு அமைப்புக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் ‘பஞ்ச்’ என்று அழைக்கப்படும் பஞ்சநாதன், மாற்றம் ஏற்படுத்தும் தலைவராகப் பார்க்கப்படுகிறார். இவரது மானுட மைய முயற்சிகள் உலக அளவில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா இவரைப் புகழ்ந்துள்ளது.

அமெரிக்க செனட் தற்போதைய கசப்பான அரசியல் சூழலில் இருந்தாலும் தேசத்தின் முதன்மை விஞ்ஞானியை தேர்வு செய்ததில் பிளவு ஏதுமில்லை. இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு நியமனம் வரையிலும் செனட் அதிவிரைவாகச் செயற்பட்டுள்ளது.

தேசிய அறிவியல் அறக்கட்டளையின் 15ஆவது இயக்குநரான சேதுராமன் பஞ்சநாதன் வரும் ஜூலை 6ஆம் திகதி பொறுப்பேற்கிறார்.

டாக்டர் சுப்ரா சுரேஷ் என்பவர் 2010 முதல் 2013 வரை இதே உயர் பதவியில் இருந்த முதல் இந்தியர் ஆவார். டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் இப்பதவிக்கு வந்த 2ஆவது இந்தியர் ஆவார்.

குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினர் ஆகிய இருதரப்பிலும் இவருக்கு ஆதரவு உண்டு. இவ்வளவு பெரிய பொறுப்பை இந்தியர் கையில் ஒப்படைத்தது குறித்து அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினர் பெருமையடைந்துள்ளனர்.

பஞ்சநாதன் தேசிய புதிய கண்டுபிடிப்பாளர்கள் உத்தியோகப்பூர்வத் திட்டங்கள் அமைப்பின் துணைத் தலைவராகவும் இருக்கிறார். அரிசோனா ஆளுநர், டக் டியூசி 2018இல் இவரைத் தனக்கு மூத்த ஆலோசகராக நியமித்தார்.

இவர் 1986இல் ஐ.ஐ.டி.யில் எலெக்ட்ரிகல் இன்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர். 1989இல் ஒட்டாவா பல்கலையில் எலெக்ட்ரிகல் மற்றும் கம்பியூட்டர் இன்ஜினீயரிங்கில் பி.எச்.டி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை விவேகானந்தா கல்லூரியில் பௌதீகம் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.