கொரோனா பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி- தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது

லிப்டில் சென்றபோது கொரோனா பாதித்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

கோழிக்கோடு அருகே உள்ள உள்ளேரி பகுதியை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருடைய பெற்றோர் அந்த இளம்பெண்ணை அந்தப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அத்துடன் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

 


அதில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து டாக்டர்கள், அந்த பெண்ணின் பெற்றோரை 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். அத்துடன் அந்த பெண்ணை அதே ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதித்தனர்.

இதற்கிடையே, கொரோனா பாதுகாப்பு உடை அணிந்த ஆஸ்பத்திரி ஊழியர் கொரோனா சிறப்பு வார்டுக்கு வந்தார். அவர் அந்த இளம்பெண்ணிடம் பரிசோதனை செய்ய வேண்டும் என்பதால் 4-வது மாடிக்கு செல்ல வேண்டும் என்று அழைத்து உள்ளார். அதன்படி அந்த பெண்ணும், ஊழியரும் லிப்ட்டில் சென்றனர்.

அப்போது அந்த ஊழியர் இளம்பெண்ணை லிப்ட்டுக்குள் வைத்து பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து 4-வது மாடிக்கு லிப்ட் வந்ததும், கதவு திறந்த உடனே, அந்த இளம்பெண் அலறியடித்தபடி லிப்ட்டைவிட்டு வெளியே ஓடினார். உடனே அந்த ஊழியர் லிப்ட் மூலம் தரைப்பகுதிக்கு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் அங்கு காட்டுத்தீ போன்று பரவியது. அத்துடன் அந்த இளம்பெண்ணிடம் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் விசாரணை நடத்தினர். அந்த ஊழியர் பாதுகாப்பு உடை அணிந்து இருந்ததால் முகம் தெரியவில்லை. இதனால் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே இது குறித்து தகவல் அறிந்ததும் அரசியல் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் அந்த ஆஸ்பத்திரி முன்பு திரண்டு, இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷம் எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த உள்ளேரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் அந்த ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றது அதேப்பகுதியை சேர்ந்த அஸ்வின் கிருஷ்ணா (வயது 34) என்பதும், அதே ஆஸ்பத்திரியில் ஊழியராக வேலை செய்து வருவதும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கேரளாவில் ஏற்கனவே கொரோனா பாதித்த இளம்பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். தற்போது கொரோனா பாதித்த இளம்பெண் பலாத்காரம் செய்ய முயற்சி நடந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.