ஆயிரம் ரூபா கோரிக்கையை கைவிட வேண்டும்- பெருந்தோட்ட நிறுவனங்கள்

ஆயிரம் ரூபா கோரிக்கையை கைவிட வேண்டும்- பெருந்தோட்ட நிறுவனங்கள்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்காக தங்களால் முன்மொழியப்பட்டுள்ள வேதன முறைமையை தொழிற்சங்கங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன.

இணையத்தளம் ஊடாக இன்றையதினம் பெருந்தோட்ட நிறுவனங்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அதன் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள பாத்திய புளுமுல்ல இதனைத் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு, அதற்கு பதிலாக தங்களால் முன்வைக்கப்பட்டுள்ள தொழில்முனைவோர் பொறிமுறைக்குட்பட்ட புதிய வேதனத்திட்டத்துக்கு தொழிற்சங்கங்களும் அரசியல்வாதிகளும் இணங்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 28 வருடங்களாக கூட்டு ஒப்பந்தம் என்ற விடயத்தில் பெருந்தோட்டத்துறை நிறுவனங்களும், தொழிற்சங்கங்களும் இணைந்து தொழிலாளர்களின் வேதனத்தை நிர்ணயிக்கின்றன.

ஆனால் இந்த வேதனமுறைமை நடைமுறை பொருளாதார நிலைமைகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.

இந்தமுறைமை மாற்றப்பட்டு, புதிய பொறிமுறைக்குள் செல்ல வேண்டும்.

தங்களால் முன்மொழியப்பட்டிருக்கின்ற புதிய தொழில்முனைவோர் அடிப்படையிலான வேதன முறைமையின் கீழ், தொழிலாளர்களது வேலையும், அதற்கான ஊதியமும் அவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன.

இந்தமுறைமை ஏனைய நாடுகளில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்றும் பெருந்தோட்ட நிறுவனங்கள் ஒன்றியத்தின் தலைவர் பாத்திய புளுமுல்ல தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்று, இன்று முன்வைக்கப்பட்ட பாதீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் 1000 ரூபாய் வேதனத்தை வழங்க முடியாத நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மாற்றியமைக்கப்பட்டு, வெற்றிகரமாக தொழிற்துறையில் ஈடுபடுகின்ற நிறுவனத்திடம் குறித்த பெருந்தோட்ட நிறுவனம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.