யாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோருக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளர்களைப் பார்வையிட வருவோர் பாஸ் நடைமுறைகளை பின்பற்றுமாறு யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் பாஸ் இல்லாமல் நோயாளர்களைப் பார்வையிட வந்தவர்கள் வைத்தியசாலைக்கு வெளியில் பல மணிநேரம் கால்கடுக்க காத்து நின்ற சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
முன்பு நோயாளர்களை பார்வையிட பாஸ் வைத்திருப்போரை அனுமதித்த பின்னர் பாஸ் இல்லாதவர்களையும் குறிப்பிடப்பட்ட நேரத்திற்கு பின்னர் அனுமதிக்கும் வழமை காணப்பட்டது.
தூர இடங்களிலிருந்து நோயாளர்களை பார்க்க வருபவர்கள் தம்மால் உரிய அனுமதி அட்டையை (பாஸ்) பெற முடியாமல் இருக்கிறது. தூர இடங்களில் இருந்து வரும் தங்களை பாதுகாப்பு கடமையில் உள்ள சில ஊழியர்கள் மரியாதையின்றி தரக்குறைவாக பேசுவதாகவும் வைத்தியாசாலைக்கு வருவோர் தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளர் கருத்து தெரிவிக்கும் போது, கொரோனா சூழ்நிலை காரணமாக நோயாளர்களைப் பார்வையிடுவோரை மட்டுப்படுத்துவதற்காக பாஸ் நடைமுறை இறுக்கமாக பார்க்கப்படுவதாகவும் இதற்கு நோயாளர்களை பார்வையிட வருவோர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.