இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை – மோடி

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை – மோடி

இந்திய எல்லைக்குள் சீன படைகள் ஊடுருவவில்லை எனவும் இராணுவ நிலைகளை கைப்பற்றவில்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையேயான பிரச்சினை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதன் நிறைவில் கருத்து தெரிவித்த மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ சீனா நமது எல்லைக்குள் ஊடுருவவில்லை. நமது நிலையையும் கைப்பற்றவில்லை. நாட்டின் ஒரு அங்குல நிலத்தின் மீது யாரும் கண் வைக்க முடியாத அளவிற்கு நமது படை பலம் உள்ளது.

நமது நாட்டை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நமது ஆயுதப்படை மேற்கொள்ளும். ஒரே சமயத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நாட்டின் ஆயுதப்படைகளுக்கு உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் எல்லைகளை பாதுகாக்க உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

நமது தேசத்தைப் பாதுகாக்க நமது படைகள் எந்த முயற்சியையும் விடாது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். நமது படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்திருந்த போதிலும் இராஜதந்திர ரீதியிலும் சீனாவிற்கு எங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. ஆனால் இறையாண்மையைப் பாதுகாப்பது மிக உயர்ந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.