கந்த சஷ்டி விரதத்தின் முதலாம் நாளான இன்று நீங்கள் அறிந்திருக்க வேண்டியவை...
மங்களகரமான சார்வரி வருடம், ஐப்பசி 30ஆம் நாள், நவம்பர் மாதம் 15ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமையான இன்று உங்களுடைய ராசி பலன் எவ்வாறு இருக்கப்போகின்றது பற்றி பார்க்கலாம்.
இன்று பல ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும் தினமாகவும், சிலருக்கு சஞ்சலமான தினமாகவும் காணப்படுவதாக கலாநிதி சிவஸ்ரீ கு.வை.க. வைதீஸ்வர குருக்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
அவர் வழங்கிய இன்றைய நாளின் சிறப்புக்கள் குறித்த விரிவான விளக்கங்கள் இதோ.
சஷ்டி விரதம்
சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்; நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான விரதமாகும்.
அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெஞ்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையானது கந்தசஷ்டி விரதம்.
வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து அழகும், அறிவூம் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்த கந்தசஷ்டி விரதமாகும்.
கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனத்துடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே
கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப்போர்க்கு இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப் பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்.
சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்திற்குரிய சிறப்பான விரதமாகும். “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்பதற்கேற்ப, கந்தசஷ்டியில் விரதமிருந்தால் “அகப்பையாகிய “கருப்பையில்”கரு உண்டாகும் என்பதும், கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்”பை”எனும் “உள்ளத்தில்”நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையில் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.
தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்யவேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலங்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப் பெருமானின் அவதாரம்.
வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையுடையது. அரசர்கள், தேவர்கள,முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றைப் பெற்றனர்.
கந்தசஷ்டி விரத அனுஷ்டானங்களும் விதிமுறைகளும்
ஐம்புலனடங்கி மன அடக்கத்தை கந்த சஷ்டி விரதம் நமக்கு உணர்த்துகிறது. இவ்விரதம் ஆறு வருடங்கள் தொடர்ந்து கைக்கொள்ளப்பட வேண்டும்.
உபவாசம் அல்லது ஒரே நேர உணவு என்பது உணவு நியதி. ஆறு வருடமும் அல்லது பன்னிரண்டு வருடங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். முறைப்படி சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து அறுதி வருடம் விரத முடிவில் விரதோத்யாபனம் செய்து பூர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
கந்த சஷ்டி என்னும் போது அதற்கென சில விரத நியதிகள் தனித்துவம் பெற்று திகழ்கின்றன. இவ்விரதம் அனுஷ்டிக்க விரும்புவோர் விரத நாட்களில் வைகறையில் துயில் எழுந்து சந்தியாவந்தனம் முதலிய காலைக்கடன்களை முடித்து, ஆற்றில் இறங்கி நீரோட்டத்தின் எதிர்முகமாக நின்று, தண்ணீரில் ஷட்கோணம் வரைந்து, அதில் சடாச்ஷர மந்திரத்தை எழுத வேண்டும். “ஓம்”என்ற பிரணவ மந்திரத்தையும் நடுவில் எழுதி முருகனை மனதில் இருத்தி, நீரில் மூழ்கி எழ வேண்டும்.
கிணறு, குளம் போன்ற நீர்நிலைகளில் நீராடுபவர்கள் வடதிசை நோக்கி நின்று மேற்கூறியவாறு தூய நீராடி, தோய்த்துலர்ந்த ஆடையணிந்து அமைதியான இடத்திலோ அல்லது ஆலயத்திலோ அமர்ந்து அல்லல் தீர்க்கும் ஆறுமுகப்பெருமானை நினைத்து தியானம் செய்ய வேண்டும்.
தியானத்துடன் நில்லாது மனம் பொறிவழிச் செல்லாது இறையருளை நாடி வேறு சிந்தனையின்றி களிப்புற வேண்டும். விரத காலங்களில் மனம் வேறு எண்ணங்களில் ஈடுபடாதிருக்க கந்தசஷ்டி கவசம்இ கந்தரலங்காரம், கந்தரனுபூதி, கந்தர் கலிவெண்பா போன்ற நூல்களைப் படிக்க வேண்டும். முருகனாலயங்களில் இவ்விரத நாட்களில் கந்தபுராண படனம் நடைபெறும். இதை தவறாது கேட்டல் மிகவும் ஆன்மிக நன்மை பயக்கும்.
தண்ணீர் கூட அருந்தாது ஆலயத்தில் வழங்கப்படும் பானகம் (தீர்த்தம்) மட்டும் அருந்தியிருத்தல் உத்தமோத்தமான விரதமாகும்.
இந்த ஆறுநாட்களும் பூரண உபவாசம் இருப்பது அதி உத்தமம் எனக் கருதப்படுகிறது. மிளகுகளை விழுங்கி. பழம் மட்டும் உண்டு, தீர்த்தம் குடித்து, இளநீர் குடித்து ஒரு நேர உணவு மட்டும் உண்டு அவரவர் தேக நிலைக்கேற்ப “கந்தசஷ்டி”விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆறாவது நாளான கந்தசஷ்டியன்று பூரண உபவாசம் இருத்தல் வேண்டும். விரதம் ஆரம்பமான தினத்தில் ஆலயம் சென்று சங்கர்ப்பம் செய்து காப்புக் கட்டி விரதத்தைத் ஆரம்பிக்கவேண்டும்.
ஒரு விரதத்தை ஆரம்பிக்கும் முன் விததத்திற்கான நோக்கம், அதனைக் கடைப்பிடிக்கும் முறை இவ்வளவு காலம் அனுஷ்டிக்கப் போகிறேன் என்று உறுதியாகத் தீர்மானம் செய்து (சங்கல்பம்) ஆலயம் சென்று சங்கல்ப்பபூர்வமாக அர்ச்சனை வழிபாடுகள் செய்து ஆரம்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால எல்லை வரை மாற்றமின்றி அவ்விரதத்தை ஒழுங்காககக் கைக்கொள்ள வேண்டும்.
விரத நியமனங்களை ஆரம்பத்திலேயே அளவுடன் கைக்கொள்வது நன்று. கடுமையான முறையில் ஆரம்பித்து பின்னர் அரைகுறையாக நிறுத்தக்கூடாது.
விரதத்தை கிரமப்படி அனுசரிக்க முடியாதவர்கள் தம்மாலியன்றளவு அனுசரிப்பதே தகுதி. தம்மளவுக்கு மீறி உடலை வருத்த நேரிடின் விரதத்தில் வெறுப்பு தோன்றும். இதனால் விரத பலன் இல்லாமல் போய்விடும்.
விரதங்கள் மக்களின் மனவலிமை அதிகமாகவும், நம்பிக்கைகளின் அடிப்படையில், அவர்களது வாழ்வில் வளமும், நலமும், மிகுவதற்கு பயன்படுகின்றன.
ஏனைய விரத அனுட்டானங்களைப் போலன்றி கந்தசஷ்டி விரதானுஷ்டானத்தை ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் கடைப்பிடிக்கின்றார்கள்.
மாணவர்கள் படிப்பிற்கும், குடும்பப் பெண்கள் குடும்ப நன்மைக்கும், கன்னிப் பெண்கள் நல்ல கணவனை வாழ்க்கைத் துணையாக அடைய வேண்டியும், குழந்தை இல்லாதோர் குழந்தை வேண்டியும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.