தயார் நிலையில் அதி நவீன போர் விமானங்கள்! எல்லையில் தொடரும் முறுகல்
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை, இந்தியாவின் ஒரு அங்குலம் நிலத்தையும் விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறினார். லடாக் எல்லையில் சீனாவுடனான மோதல் தொடர்பாக பிரதமர் மோடி அனைத்து கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்தின் முடிவில் பிரதமர் மோடி பேசியதாவது, இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை. இந்தியாவின் எந்த ஒரு நிலையையும் சீனா ஆக்கிரமிக்கவும் இல்லை. எல்லையில் நடைபெற்ற மோதலில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்திருக்கின்றனர்.
இதற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கிறோம். ஒட்டுமொத்த தேசமும் நமது ராணுவ வீரர்களின் பின்னால் இருக்கிறது. நாம் அவர்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம். நமது எல்லைகளை நமது முப்படைகள் முழுவீச்சில் பாதுகாக்கும் திறனை பெற்றிருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாக எல்லைப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கிறோம். முப்படைகளுக்கும் நவீன தளவாடங்களை வழங்கி இருக்கிறோம். நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட நாம் விட்டுக் கொடுக்க மாட்டோம்.
இந்தியா எப்போதும் அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. அதேநேரத்தில் தேசத்தின் இறையாண்மைதான் அத்தனையையும் விட முதன்மையானது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் பிரதமர் மோடிக்கும் மத்திய அரசுக்கும் உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தியா - சீனா எல்லையில் பதற்றம் நிலவும் நிலையில், இந்திய விமானப்படை தளபதி ஆர்.கே.எஸ்.பதவுரியா காஷ்மீரின் லே மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இடங்களுக்கு ரகசியமாக சென்று ஆய்வு நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. விமானப் படை தளபதி 2 நாட்கள் ஆய்வு நடத்தியுள்ள தகவலை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் சுகோய்-30எம்கேஐ, மிராஜ் 2000 மற்றும் ஜாக்குவார் போன்ற அதி நவீன போர் விமானங்கள் சீன எல்லைக்கு வெகு தொலைவில் தயார் நிலையில் உள்ளன. உத்தரவு வந்ததும் பறந்து செல்லும் தாக்கும் தொலைவில் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அப்பச்சே ஹெலிகாப்டரும் தயார் நிலையில் உள்ளது.