தீபாவளி திருநாள் பரிகாரம்! குபேர சாஸ்திரம் கூறும் உண்மைகள்..
ஸ்ரீ கிருஷ்ணர் நரகாசுரனை வதம் செய்த நாளான தீபாவளி நன்னாளில் நாம் வேண்டும் வரங்கள் அப்படியே கிடைக்கும் என்பதே ஐதீகம். இந்த நாளில் தீயவைகள் அழியவும், கஷ்டங்கள் நீங்கி செல்வம் பெருகவும் மகாலட்சுமி தேவி வழிபாடு செய்வது சிறந்த பலன் தருவதாக குபேர சாஸ்திரம் கூறுகிறது.
அதிலும் குறிப்பாக இந்த நாளில் கஜலட்சுமி வழிபாடு செய்வது குபேர சம்பத்தை கொடுப்பதாக கூறப்படுகிறது. எப்படி செய்வது என்பதை பற்றிய தகவல்களை தனிப் பதிவில் பார்க்க இருக்கிறோம். மாறிவரும் மனநிலைக்கு ஏற்ப, இன்ப துன்பங்களை ஏற்றுக் கொள்வது போல, இறைவழிபாடுகள் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக் கொள்ள முடியும் என்பதை உணர வேண்டும்.
உண்மையான பக்திக்கு என்றுமே பலன்கள் அதிகம். அவநம்பிக்கையோடு எந்த ஒரு பரிகாரத்தை மேற்கொண்டாலும் அதில் பலன் இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.
குபேர சாஸ்திரத்தின்படி தீபாவளி அன்று இந்த பூஜை செய்தால் அடுத்த தீபாவளிக்குள் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. இதை முழு நம்பிக்கையோடு தூய பக்தியோடு செய்ய வேண்டும். நமக்காக நாம் வேண்டும் வேண்டுதல்களை விட, மற்றவர்களுக்காக நாம் வேண்டும் பிரார்த்தனைகள் விரைவாக பலிக்கும்.
நான் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினால் கிடைப்பது திருவோடு தான். என்னோடு சேர்ந்து என்னை சுற்றி இருப்பவர்களும், இல்லாத எளியவர்களும் மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்ற பிரார்த்தனையே சூட்சமமாக வெற்றி பெற்று விடுகிறது.
பிறருக்காக சேவை செய்பவர்களை பார்த்திருப்பீர்கள். அவர்களிடம் எப்பொழுதும் செல்வம் எங்கிருந்தாவது வந்து கொண்டே இருக்கும். இதுவே பணத்தின் உண்மையான தாத்பரியம்.
தீபாவளி அன்று கங்கா ஸ்நானம் செய்து முடித்தபின், அதாவது தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து முடித்த பின் பூஜை செய்ய வேண்டும். பூஜை செய்வதற்கு கஜலக்ஷ்மி படம் வேண்டும். வீட்டில் மகாலட்சுமி படமும் கஜலட்சுமி படமும் இருப்பதை செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கஜலக்ஷ்மி படம் என்பது கஜம் என்றால் யானை. இரண்டு யானைகளை இரண்டு புறங்களிலும் பெற்று நடுவில் மகாலட்சுமி சிரித்த முகத்துடன் சிவப்பு அல்லது பச்சை வர்ண வஸ்திரம் உடுத்தி வீற்றிருப்பாள். இந்த படத்தை வீட்டில் வைத்து இருந்தால் வருமானம் உயரும். ஐந்து வெற்றிலைகளை கஜலட்சுமி படத்தின் முன்பாக வைத்து, அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து கொள்ளுங்கள்.
வாசமுள்ள மலரை கஜலக்ஷ்மிக்கு மாலையாக சாற்றுங்கள். பின்னர் ஐந்து பெரிய அகல் விளக்குகளை நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். ஒரு வெள்ளை துணியை அதன் முன்பாக விரித்து வைத்துக் கொள்ளுங்கள். அதில் கைப்பிடி அளவிற்கு வெந்தயத்தை போட்டு கொள்ளுங்கள்.
வெந்தயமானது செல்வத்தை தக்க வைக்கும் ஆற்றல் கொண்டது. 108 என்ற எண்ணிக்கையில் ஏலக்காயை எடுத்துக் கொள்ளுங்கள். ஐந்து விளக்குகளுக்கு முன்னால் ஒவ்வொன்றாக எடுத்து கஜலட்சுமிக்கு அர்ச்சனை செய்யுங்கள்.
ஒவ்வொரு முறையும் ஏலக்காயை எடுத்து அர்ச்சனை பொழுது கீழ்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். 108 முறை மந்திரம் சொல்லி, 108 ஏலக்காய்களை அர்ச்சனை செய்து முடித்த பின்னர் அந்த ஏலக்காய்களை வெந்தயத்துடன் சேர்த்து கொள்ளுங்கள்.
பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரத்தை சிறிதளவு போட்டுக் கொள்ளுங்கள். இதனை ஒரு மூட்டையாக கட்டி பணம் வைக்கும் இடமாக உங்களுக்கு எது இருக்கிறதோ அங்கே வைத்து விடுங்கள். வியாபாரம் செய்பவர்கள் கல்லாப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம். அதுபோல் செல்வம், பணம், அதிகம் வரக்கூடிய இடத்தில் பீரோவில் கூட வைத்துக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்வதால் அடுத்த தீபாவளிக்குள் நம்முடைய வாழ்க்கை முறை மாறும் என்பதே நிதர்சனம்.