அழிந்து போன மனித இனத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

அழிந்து போன மனித இனத்தின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

தென் ஆப்பிரிக்காவில் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித இனத்தின்(பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ்) எலும்புக்கூடு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவீன மனிதர்கள் இன்று எவ்வாறு வாழ்கின்றோமே அதேபோல் ஒரு இனம் 20 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததற்கான அடையாளமாக இது இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

நவீன மனிதர்களின் நேரடி மூதாதையர்களான ஹோமோ அராக்கட்டர்ஸ் இனத்தின் சகோதர இனமே இது என்று அவுஸ்திரேலிய ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த எலும்புக்கூட்டுக்கு சில பற்களே இருக்கின்றன. இதற்கு முன்பு இதே பகுதியில் ஒரு பல் மட்டும் உள்ள ஒரு இனத்தின் எலும்புக்கூடும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் தென் ஆபிரிக்க பகுதியில் ஒரே காலக்கட்டத்தில் 3 இன மக்கள் வாழ்ந்திருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.

இந்நிலையில் பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் மனித இனத்தின் எலும்புக் கூட்டைக் கண்டுபிடித்த அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் இது பரிணாம வளர்ச்சிக் குறித்த ஆய்வில் அடுத்த மைல்கல் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் மனித இனத்தைப் போலவே வாழ்ந்து வந்த இந்த இனம் மிக விரைவிலேயே அழிந்து விட்டதாகவும் அங்கு ஆய்வு மேற்கொண்ட மானுடவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே காலக்கட்டத்தில் மனித இனத்தின் மூதாதையரான ஹோமோ அராக்கட்டர்ஸ் மற்றும் பரோன்த்ரோபஸ் ரோபஸ்டஸ் ஆகிய இனங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மனித பரிணாம வளர்ச்சி குறித்த ஆய்வில் புதிய வெளிச்சம் பெற்றுவிட்டதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.