பிரதமர் மோடி தலைமையில் இன்று இந்தியா - ஆசியான் உச்சி மாநாடு

பிரதமர் மோடி தலைமையில் இன்று இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு, காணொலி காட்சி மூலம் நடக்கிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கம், ‘ஆசியான்’ என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, புருனே, வியட்நாம், லாவோஸ், மியான்மர், கம்போடியா ஆகிய 10 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

 


ஆசியான் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தும் நட்பு நாடுகளாக இந்தியா, அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியான உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு, 16-வது உச்சி மாநாடு, தாய்லாந்து நாட்டில் நடந்தபோது பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்த நிலையில், 17-வது இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு இன்று காணொலி காட்சி மூலம் நடக்கிறது. பிரதமர் மோடியும், வியட்நாம் பிரதமர் நுயன் சுவான் புக்கும் கூட்டாக தலைமை தாங்குகிறார்கள்.

இந்தியா-ஆசியான் இடையிலான பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த உறவின் நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. தகவல் தொடர்பு, கடல்சார் ஒத்துழைப்பு, வர்த்தகம், கல்வி ஆகிய முக்கிய துறைகளின் முன்னேற்றம் பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.

கொரோனா காரணமாக உண்டான பொருளாதார மந்தநிலையில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் ஆலோசனை நடத்தப்படுகிறது. முக்கியமான பிராந்திய, சர்வதேச நிகழ்வுகள் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.