குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
குழந்தைகள் வளரும்போது அவர்களின் குணாதிசயங்களும் மாறுபட தொடங்கும். குறும்புத்தனத்துடன் நடந்து கொண்டவர்கள் வயது அதிகரிக்க தொடங்கியதும் தங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்வார்கள். பெற்றோருடன் பேசும் வார்த்தைகளும், செலவிடும் நேரமும் குறையத்தொடங்கும். அந்த சூழலை பெற்றோர் கையாள்வது சவாலான விஷயமாக இருக்கும். பொறுமையாகவும், அக்கறையுடனும் செயல்பட்டு குழந்தைகளை நல்வழிப்படுத்தும் வழிமுறைகள்:
* குழந்தைகள் கோபமாக இருந்தாலோ, தங்களுக்கு பிடித்தமானவற்றை கேட்டு அடம் பிடித்து அழுதாலோ சிறிது நேரம் அமைதியாக இருங்கள். பெற்றோர் தங்கள் உணர்வுகளை புரிந்துகொள்ளவில்லை என்ற ஏக்கம் அவர்களிடத்தில் வெளிப்படும். அதேநேரத்தில் பெற்றோர் எப்படியும் தங்களை அரவணைப்பார்கள் என்ற எண்ணமும் இருக்கும். அழுகை குறைய தொடங்கியதும் அழைத்து அன்பாக பேசுங்கள். அவர்களின் விருப்பத்தை உடனடியாக நிறைவேற்றிவிடாதீர்கள். அதேவழக்கத்தை பின்தொடர்ந்துவிடுவார்கள். அவர்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்யுங்கள்.
* தொடர்ந்து அடம்பிடித்தால் அவர்கள் விரும்புவதை நிறைவேற்றுவதாக ஒப்புக்கொள்ளுங்கள். அவர்கள் இயல்புக்கு திரும்பியபிறகு விளக்கமாக சொல்லி புரியவையுங்கள். அவர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டியதும் அவசியம். அவர்கள் சொல்ல விரும்புவதை காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். அவர்களின் நிலைப்பாடு நியாயமானதாக இருந்தால் நீங்கள் பிடிவாதத்தை தளர்த்துவதில் தவறில்லை.
* சில குழந்தைகள் கோபமாக இருந்தால் சத்தம் போட்டு பேசுவார்கள். கையில் கிடைக்கும் பொருட்களையெல்லாம் தரையில் போட்டு உடைக்கவும் செய்வார்கள். இத்தகைய போக்கு மோசமானது. அதுபோல் அண்டை வீட்டாரின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் அணுகுமுறையும் மோசமானது. அந்த சமயத்தில் பொறுமை காப்பது மிக அவசியமானது. அந்த அளவுக்கு குழந்தைகள் ஏன் விரக்தி அடைகிறார்கள் என்பதை கண்டறி வதற்கு முயற்சி செய்ய வேண்டும். அடிக்கடி கோபம் கொள்ளும்போக்கு அதிகரிக்கதொடங்கினால் உளவியல் நிபுணர்களிடம் ஆலோசனை பெறலாம்.
* குழந்தைகள் ஏதாவதொரு கட்டத்தில் பொய் சொல்வார்கள். அதனை கவனத்தில் கொள்ளாவிட்டால் அதுவே பழக்கமாகிபோய்விடும். நாளடைவில் முக்கியமான விஷயங்களையெல்லாம் மறைக்க தொடங்கிவிடுவார்கள். குழந்தைகள் பொய் சொல்லும்போது அவர்களை திட்டுவதை தவிர்க்க வேண்டும். அவர்களிடம் மனம் திறந்து பேசி எதற்காக பொய் சொல்லும் நிர்பந்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். எது தவறு? எது சரி? என்பதை அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் விளக்கி புரியவையுங்கள். குழந்தைகள் தவறு செய்தால் கூட திட்டாமலோ, அடிக்காமலோ அன்பாக பேசினால் உண்மையை சொல்வதற்கு பயப்படமாட்டார்கள்.
* குழந்தைகள் உடன் பிறந்த சகோதரர், சகோதரிகளுடன் சண்டை போடுவது ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் வழக்கம். இருப்பினும் பெரும்பாலான பெற்றோர்கள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள் வதில்லை. நீண்டகாலமாக கவனிக்காமல் விட்டால் அவர்களுக்குள் வெறுப்புணர்வு குடிகொண்டுவிடும். அப்படி சண்டை போடுவதற்கோ, வாக்குவாதம் செய்வதற்கோ இடம் கொடுக்கக்கூடாது. அவர்களை அமைதிப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். மீறி சண்டை போட்டால் அபராதம் செலுத்தவேண்டும் என்று கண்டிப்புடன் கூறவேண்டும். எதிர்காலத்தில் அவர்களுக்குள் குரோதம் வளராமல் இருக்க வழிவகுக்கும்.
* நொறுக்குத்தீனிகள், இனிப்பு பலகாரங்களை குழந்தைகள் ரசித்து ருசிப்பார்கள். காய்கறிகள், பழங்களை அவ்வளவாக விரும்பமாட்டார்கள். அதற்காக கட்டாயப்படுத்தி சாப்பிடவைக்கக்கூடாது. சத்தான உணவை உட்கொள்வதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கிக்கூற வேண்டும்.
* செல்போன், டேப்லெட், வீடியோ கேம் போன்ற டிஜிட்டல் சாதனங்கள் குழந்தைகளின் பொழுதுபோக்கில் முக்கிய பங்குவகிக்க தொடங்கிவிட்டன. குழந்தைகளை குஷிப்படுத்துவதற்காக பல பெற்றோர் அவற்றை வாங்கிக்கொடுக்கவும் செய்கிறார்கள். குழந்தைகளை சாப்பிடவைப்பதற்கு டிஜிட்டல் சாதனங்களை சார்ந்திருக்கும் நிலையும் இருக்கிறது. அதை பார்த்துக்கொண்டு குழந்தைகள் வேகமாக சாப்பிடுவார்கள். அதனால் தங்களின் வேலையும் எளிதாகிறது என்று பெற்றோர் நினைக்கலாம். நீண்டகாலமாக இந்த வழக்கத்தை தொடர்வது குழந்தைகளை மின்னணு சாதனங்களுக்கு அடிமைப்படுத்திவிடும். வெளிப்புற விளையாட்டுகள், இருந்த இடத்தில் இருந்தே விளையாடும் பாரம்பரிய விளையாட்டுகளை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவை குழந்தைகளுக்கு வேடிக்கையாகவும், புதுமையாகவும் அமையும். உற்சாகமாக விளையாடவும் தொடங்கிவிடுவார்கள். தினமும் விளையாடுவதற்கு குறிப்பிட்ட நேரத்தை வரையறை செய்வதும் முக்கியம்.