கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது தொற்று நோய் விசேட மருத்துவமனை!
கிளிநொச்சியில் வடக்கிற்கான தொற்றுநோய் விசேட மருத்துவமனை, கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கென விளையாட்டு மைதானம் பிரார்த்தனை மண்டபம் நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் நீண்ட காலம் தங்கநேரிடுபவர்கள் தாம் விரும்பிய உணவு பானங்கள் உள்ளிட்ட (புகையிலை மற்றும் மதுசாரம் தவிர்ந்த) பாவனைப் பொருட்களை அவர்களாகவே வெளியிலிருந்து இணையத்தளம் ஊடாக வாங்கிக் கொள்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.
தற்போது 200 நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையானது எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு அதிவிசேட தொற்றுநோயியல் ஆய்வுகூடங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
தேசிய வைத்தியசாலைகளது தரத்திற்கு பிரதேசத்தில் ஒரு வைத்தியசாலையினை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சினால் இவ்வைத்தியசாலை தொடர்ந்தும் மேம்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன், வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அ. கேதீஸ்வரன், பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திலீபன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி,
உலக வங்கியின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார, வவுனியா மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார் , இராணுவ அதிகாரிகள், கிளிநொச்சி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசங்க பண்டாரகுணதிலக கிளிநொச்சி மாவட்டவைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ராகுலன், கிளிநொச்சி பிராந்தியசுகாதார திணைக்கள திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் சுகந்தன் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.