வரலாற்று சாதனை படைத்த ஹட்டன் கல்வி வலயம் - 1000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு!

வரலாற்று சாதனை படைத்த ஹட்டன் கல்வி வலயம் - 1000 மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு!

ஹட்டன் கல்வி வலயத்தில் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு சுமார் 1,000 மாணவர்கள் தெரிவாகியிருப்பதாகவும் இது வரலாற்று சாதணை என ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர். பி.ஸ்ரீதரன் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்தின் உயர்தர பெறுபேறுகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கல்வி பொதுதராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்கள் தொடர்பான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது இந்த வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஹட்டன் கல்வி வலயத்தில் 1 ஏபி,1 சி 38 தமிழ் சிங்கள பாடசாலைகளிலிருந்து 990 மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகியுள்ளனர்.

இதில் தமிழ் மொழி மூலம் 715 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 275 மாணவர்களும் தெரிவாகியுள்ளனர்.

இதில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் தமிழ் மூலம் 60 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 20 மாணவர்களும் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் தமிழ் மூலம் 40, சிங்கள மொழிமூலம் 20, வர்த்தக பிரிவில் தமிழ் மொழி மூலம் 150, சிங்களம் 60 மாணவர்களும், கலைத்துறையில் தமிழ் மொழி மூலம் 400 மாணவர்களும் சிங்கள மொழி மூலம் 120 மாணவர்களுமாக தொழிநுட்ப பாடங்களில் தமிழ் மொழிமூலம் 65 பேரும் சிங்கள மொழி மூலம் 55 பேருமாக 990 பேர் தெரிவாகியுள்ளனர்.

கடந்த வருடம் குறித்த கல்வி வலயத்திலிருந்து 567 மாணவர்கள் தெரிவான நிலையில் இவ்வருடம் 423 மாணவர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர். மலையகத்திற்கு பல்கலைகழகங்களுக்கு 500 மாணவர்களை தெரிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று புத்தி ஜீவிகளால் சுட்டிக்காட்டப்பட்டு வந்த நிலையில் ஹட்டன் கல்வி வலயத்தில் மாத்திரம் இது இரட்டிப்பாக அதிகரித்திருப்பது எமது சமூகம் கல்வியின் மீது பாரிய அக்கறை செலுத்துவது சுட்டிக்காட்டுவதாக பலரும் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த ஹட்டன் வலயக்கல்விப்பணிப்பாளர் இம்முறை உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் கணிசமான மாணவர்கள் வெற்றியடைந்து மிகப்பெரிய வரலாற்று சாதனையினை படைத்துள்ளார்கள். ஏற்கனவே மலையகத்தில் உள்ள புத்தி ஜீவிகள் தலைவர்கள் 500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்ப வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்தார்கள் இந்த கோரிக்கைக்கு சவாலாக ஹட்டன் கல்வி வலயம் சுமார் 1000 மாணவர்களை தெரிவு செய்துள்ளது. இது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பும் மாபெரும் சாதனையினை அடைந்துள்ளது.

500 மாணவர்கள் பல்கலைகழத்திற்கு அனுப்ப வேண்டும் என்று கனவு கண்டு இருக்கும் போது என்னுடைய ஐந்து வருட சேவை காலத்தில் நான் எடுத்த முயற்சியின் காரணமாக இன்று நாங்கள் ஆயிரம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு அனுப்புகிறோம்.

ஆகவே மலையகத்திற்கு பல்கலைக்கழகம் ஒன்று தேவை என்பதனை இந்த பெறுபேறுகள் பல்கலைகழக அனுமதி உறுதி செய்திருக்கிறது.

ஏனைய பகுதிகளில் இருப்பது போல மலையகத்திற்கும் பல்கலைகக்கழகம் தேவை என்பதனை மேலும் மேலும் சுட்டிக்காட்டுகின்றனர். அதே போன்று ஏனைய பிரதேசங்களிலிருந்து மாணவர்கள் இம்முறை தெரிவாகியிருப்பதனால் 1500 இற்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை காணப்படுகின்றது. மலையகத்தில் ஒரு பல்கலைகழகம் அமையுமானால் அதற்கு தேவையான மாணவர்களை ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து அனுப்புவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம்.

ஆரம்பகாலத்தில் ஹட்டன் கல்வி வலயம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. இன்று பலரின் அர்ப்பணிப்பினால் பாரிய வளர்ச்சியினை பெற்றுள்ளது. எதையும் செய்ய முடியாது என கூறிய நிலையில் இன்று இந்த கல்வி வலயத்தினை திரும்பி பார்க்கும் அளவுக்கு என்னுடைய காலகட்டத்தில் ஏற்படுத்தியிருப்பதை நான் ஒரு பாக்கியமாக கொள்கிறேன்.

தோட்ட மாணவர்கள் படிக்க மாட்டார்கள் அப் பாடசாலைகளை மேம்படுத்துவதனால் பயனில்லை என்ற நிலை மாறி தோட்டங்களிலும் புத்தி கூர்மையான மாணவர்கள் இருக்கிறார்கள் என்பதனை இன்று எமது மாணவர்கள் நிரூபித்து காட்டியிருக்கிறார்கள்.

அதற்கு மாணவர்களின் வருகை ஆசிரியர்கள் அதிபர்கள் கல்வி புலச்சார்ந்தவர்களின் ஒத்துழைப்பே இந்த வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

எனவே அடுத்த வருடம் இக்கல்வி வலயத்திலிருந்து 1500 மாணவர்களை பல்கலைக்கழகம் அனுப்புவதே எனது நோக்கம் அதே நேரம் இதற்கு அப்பால் சில மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகா விட்டாலும் தொழில் ரீதியான கல்வியியற் கல்லூரிகள் திறந்த பல்கலைக்கழகங்கள், தொழிநுட்ப கல்லூரிகள் போன்றவற்றிக்கு தெரிவாவதற்கான வாய்ப்புக்களை பெற்றுள்ளார்கள் ஆகவே பல்வேறு குறைபாடுகளுக்கு மத்தியிலும் எமது மாணவர்களுக்கு எதனையும் சாதிக்கும் திறன் உண்டு என்பதனை நிரூபித்திருப்பதாகவும் இதற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் இந்த வேளையில் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.