அபுதாபியில் உள்ள கடல்பகுதியில் அரிய வகையிலான 23 அடி நீளமுள்ள திமிங்கல சுறாவானது தென்பட்டுள்ளது.
அபுதாபி சுற்றுச்சுழல் ஏஜென்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆங்கிலத்தில் ‘வேல் ஷார்க்’ என அழைக்கப்படும் திமிங்கல சுறாவானது உலகில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாகும். இந்த வகை சுறா மீன்கள் சுமார் 62 அடி நீளம் வரை வளரக்கூடியவை. இதன் வாயில் 300 அடுக்குகளில் சிறிய பற்கள் மற்றும் 20 உணவை வடிகட்டி விழுங்கக்கூடிய அமைப்புகள் உடையது.
வடிகட்டி உண்ணக்கூடியது என்பதால் கடலில் உள்ள சிறு மீன்கள், மீன் முட்டைகள், நண்டு போன்ற உயிரினங்களை உணவாக எடுத்துக்கொள்கிறது. உலக அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புள்ளி விவரப்படி மொத்தம் 168 திமிங்கல சுறாக்கள் மட்டுமே வாழ்வதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரிய வகை திமிங்கல சுறா அபுதாபியில் உள்ள பஹியா கடல் கால்வாயில் தென்பட்டுள்ளது. சுமார் 23 அடி நீளமுள்ள இந்த சுறா ஆண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அழிந்து வரும் இனமாக உள்ளதால் பொதுமக்கள் யாரும் அந்த பகுதியின் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. குறிப்பாக அந்த திமிங்கல சுறா உலாவும் பகுதிகளில் நீந்துவதோ, குதிப்பதோ அல்லது உணவளிப்பதோ கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இது மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதில்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.