
புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ் நாடு திறக்கப்படலாம்...!
புதிய வழமைப்படுத்தல் திட்டத்தின்கீழ், பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு திறக்கப்படக்கூடும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதன்போது, சுகாதார நடைமுறைகளை பின்பற்ற அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊடகங்களுக்கு அவர் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலும் எதிர்வரும் திங்கட்கிழமை முதல், நாடு திறக்கப்படக்கூடும்.
இந்த சந்தர்ப்பத்தில், உலகில் தற்போது நடைமுறையில் உள்ள எண்ணக்கருவின் அடிப்படையில் செயற்பட வேண்டும்.
புதிய வழமைப்படுத்தல் என்ற அடிப்படையிலான அந்த எண்ணக்கருவுக்கு, உலக சுகாதார ஸ்தாபனத்தினாலும், சில ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது, கொரோனா வைரஸ் பரவல் இருக்கின்ற நிலையில், அதனுடன் வாழ பழகுவது தொடர்பான எண்ணக்கருவே அதுவாகும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கூற்றுப்படி, மேலும் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு இந்த நோய்த் தாக்கம் இருக்கும்.
வைரஸ் தொற்று நிலைமைக்கு மத்தியில், அதனைக் கட்டுப்படுத்தி வாழவேண்டிய நிலை உள்ளது.
முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளியை பேணுதல் என்பனவே, இந்த தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான மிகமுக்கியமான உபாயங்களாகும்.
இதற்கமைய, பொதுமக்கள் செயற்படுவார்களாயின், இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியும் என தாய்லாந்து மற்றும் தாய்வான் முதலான நாடுகள் நிரூபித்துள்ளன.
எனவே, இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு, மக்களின் ஒத்துழைப்பு நூற்றுக்கு 100 வீதம் அவசியமாகும் என காவல்துறை பேச்சாளர், பிரதிக் காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.