பொருளாதார மையங்களை மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானம்..!

பொருளாதார மையங்களை மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானம்..!

ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், கொவிட் ஒழிப்புக்காக நடைமுறைப்படுத்தப்படும் சுய தனிமைப்படுத்தல் நடைமுறைகளை கடுமையாக கண்காணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற கொவிட்-19 தடுப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சமூகத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், அவர்களும், அவர்களுடன் தொடர்புடையவர்கள் உட்பட, அவர்களின் பிரதேசங்கள் குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

அவசியம் ஏற்படின், குறித்த பகுதியை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கலாம் என்றும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதேநேரம், பொருளாதார மையங்களை, மொத்த விற்பனைக்காக மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மரக்கறி, பழங்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுடன் மாவட்டங்களுக்கிடையில் பயணிக்கும் பாரவூர்திகளுக்கு ஊரடங்கு அனுமதி அவசியமில்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை, மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் திங்கட்கிழமையுடன் நீக்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஹிரு டிவியில் இன்று காலை ஒளிபரப்பான பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதியுடன் நேற்று முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது, தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை முன்கொண்டு செல்லும் எதிர்பார்ப்பு இல்லை என்ற விடயத்தை ஜனாதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

எனவே, மேல் மாகாணத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் 10 நாட்களை உச்சபட்சமாக பயன்படுத்தி, நோயாளர்களையும் அவர்களுடன் தொடர்புடையவர்களையும் அடையாளம்கண்டு, அந்த நோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்படி கூடுமானவரையில் மேல் மாகாணத்தில் திங்கட்கிழமையுடன் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதற்கு முயற்சி எடுக்கப்படும்.

அதேநேரம், பொதுமக்களும் இந்த விடயங்களை உணர்ந்து சுகாதார அறிவுறுத்தல்களை உயரிய முறையில் பின்பற்றி செயற்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.