
கொரோனா தொற்று கொத்தணிகளாக மேலும் பல பிரதேசங்கள் அடையாளம் : ஹரித்த அலுத்கே!
நாட்டில் கொரோனா தொற்று கொத்தணிகளாக தற்போதைய நிலையில், 14 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாட்டில் தற்போது 14 கொரோனா கொத்தணிகள் உருவாகியுள்ளன. நேற்றையதினம் 400 மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதில் 40 மேற்ப்பட்டவர்கள் மாத்திரமே தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டனர் ஆனால் ஏனைய அனைவரும் சுயதனிமைப்படுத்தல் மற்றும் சமூகத்தின் மத்தியில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது இலங்கையில் ஏற்கனவே இருந்திருக்கவில்லை. மேல்மாகாணமாகவும் தற்போது அவதானம் மிக்க பிரதேசமாக காணப்படுகின்றது.
கேகாலை, காலி, இரத்தினபுரி மற்றும் குருணாகலை ஆகிய பிரதேசங்கள் தற்போதைய நிலையில் அவதானம் மிக்க பகுதிகளாக காணப்படுகின்றனர்.
உயிரிழந்த பலரின் பிரேதபரிசோதனைகளின் போதே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் வீடுகளிலேயே உயிரிழந்துள்ளனர். ஆகவே இது தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும்.
தற்போது நாட்டில் பரவிவரும் கொரோனா வைரஸானது மிகவும் வேகமாக பரவக்கூடியது என ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஆய்வில் உயிரிழப்பு குறித்து குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால் நடைமுறை ரீதியில் பார்க்கும் போது உயிரிழப்புகள் தொடர்பில் எதிர்வரும் காலத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிவரும்.
சிலருக்கு PCR பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட நபர்களுக்கு உயிரிழந்ததன் பின்னர் தொற்று உறுதியாகியுள்ளது. ஆகவே உலக சுகாதார ஸ்தாபனம் குறிப்பிட்டுள்ளதை போன்று மீள் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஹரித்த அலுத்கே மேலும் குறிப்பிட்டுள்ளார்.