
கிளினிக் நோயாளர்களுக்கு மருந்துக்களை விநியோகிக்க விசேட திட்டம் முன்னெடுப்பு
அரச வைத்தியசாலைகளின் சாய்சாலைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களில், தற்போது நாளாந்த பாவனைக்குரிய மருந்துகளை மிக குறைந்தளவே கையிருப்பில் வைத்துள்ளவர்களுக்கு மருந்துகளை விநியோகிப்பதற்குரிய செயற்திட்டம் ஒன்றினை சுகாதார அமைச்சும், அஞ்சல் திணைக்களமும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்த செயன்முறையானது நாளைய தினத்தில் இருந்து (05.11.2020) நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சரியான பெயர், முகவரி, சாய்சாலை இலக்கம், மற்றும் தொலைபேசி இலக்கம் என்பன நோயாளிகளது வீட்டு வாசலிற்கு மருந்துகளைக் கொண்டு சென்று சேர்ப்பிப்பதற்கு மிகவும் அவசியமாகும்.
ஆதலினால், இயலுமான விரைவில் நீங்கள் சாய்சாலைப் (கிளினிக்) பதிவு வைத்துள்ள வைத்தியசாலையுடன் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு மேற்படி விபரங்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
இதனை அடுத்து வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உங்களது சரியான பெயர், முகவரி, சாய்சாலை இலக்கம், தொலைபேசி இலக்கம் மற்றும் வைத்தியசாலையின் பெயர் ஆகியன விபரங்களைப் பொறித்த மருந்துப் பொதிகளை தயாரிப்பார்கள். இப்பொதிகள் ஊரடங்கு வேளைகளிலும் அஞ்சல் அலுவலரால் உங்களுக்கு ஒழுங்காக விநியோகிக்கப்படும்.
தங்களது பகுதி கிராம அலுவலகர் அல்லது பொதுச்சுகாதார மருத்துவ மாதுவிடம் உங்களது சரியான விபரங்களை நீங்கள் பதிவு செய்துள்ள வைத்தியசாலைக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்.
வினைத்திறனான முறையில் மருந்துகளை விநியோகிப்பதற்கு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், இலங்கை அஞ்சல் சேவைத்துறையினர் மற்றும் நோயாளர்கள் ஆகிய அனைவரும் வழங்கும் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றினை நான் பாராட்டுகின்றேன் என்றும் கூறியுள்ளார்.