படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்ஸா பொலிஸ் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஏ.ஆர்.பி.ஜே அல்விஸை நியமித்தமைக்கு அவர் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமது தந்தையான லசந்த விக்கிரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் குற்றப்புலனாய்வுத்துறையே விசாரணையை மேற்கொண்டது.

இந்தநிலையில் 2009 ஒப்டோபரில் குற்றப்புலனாய்வுத்துறை கல்கிஸ்ஸை நீதிமன்றத்துக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது.

அதில் 2010ஆம் ஆண்டு பயங்கரவாத தடுப்புப்பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்த பிரசன்ன ஜே அல்விஸ், லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளிகளை மறைத்து காப்பாற்ற முயற்சித்தார் என்று தெரிவிக்கப்பட்டிருந்து.

இதனையடுத்து அப்போது பதில் பொலிஸ் மா அதிபராக இருந்த சிடி விக்கிரமரத்ன, அல்விஷை கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

எனினும் திடீரென மனம் மாறிய பதில் பொலிஸ்மா அதிபர் அல்விஸை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவில்லை.

அதற்கு பதிலாக சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸ் 2020, மே 21ஆம் திகதியன்று குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அஹிம்ஸா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்விஸை பதவியில் இருந்து நீக்கவேண்டும். அத்துடன் அவரை குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்றும் அஹிம்ஸா தமது கடிதத்தில் கோரியுள்ளார்.