சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிக்க விரையும் புலனாய்வு துறை..!

சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்களை கண்காணிக்க விரையும் புலனாய்வு துறை..!

கேகாலை மாவட்டத்தின் ஹெம்மாத்தகம, மாவனெல்லை, புளத்கொஹூபிட்டி ஆகிய காவல்துறை அதிகாரத்திற்கு உட்பட்ட பிரதேசங்களிலும், கலிகமுவ பிரதேச சபை அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாட்டு மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன் குருநாகல் மாவட்டத்தில் கிரிஉல்ல காவல்துறை அதிகாரத்திற்கு உட்டபட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் தமது வீடுகளில் இருந்து வெளியேறுகின்றார்களா? என்பது தொடர்பில் அறிந்துக் கொள்ள புலனாய்வு பிரிவினர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் சிலர் அதனை மீறி வெளியில் நடமாடுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

கொவிட்-19 நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என்ற அடிப்படையிலேயே தனிமைப்படுத்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்திலும் எஹெலியகொட மற்றும் குலியாப்பிட்டிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள், மருந்து பொருட்கள் என்பவற்றை நடமாடும் வர்த்தக நிலையங்கள் ஊடாக விநியோகிக்கும் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் கொழும்பு மாவட்டத்திலுள்ள ரத்மலானை, போகுந்தர, நாராஹேன்பிட்டி ஆகிய பொருளாதார மத்திய நிலையங்களை நாளைய தினம் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

இதற்கமைய அங்குள்ள சேவையாளர்களுக்கான பி.சீ.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளன

இதேவேளை புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன

அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியாளர்களினதும் வர்த்தகர்களினதும் சங்க தலைவர் ஜி. ராஜேந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.