நாட்டில் இன்றைய கொரோனா நிலவரம்- முழுமையான விபரங்கள் இதோ..!
நாட்டில் இன்றைய தினம் இதுவரையான காலப்பகுதி வரையில் 164 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த 43 பேருக்கும், நோயாளர்களுடன் தொடர்பில் இருந்த 121 பேருக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 224 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் 5 ஆயிரத்து 953 கொவிட் 19 நோயாளர்கள் நாட்டில் உள்ள பல வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனினும் நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
இன்றைய தினம் மேலும் 344 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 249 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொவிட் 19 தொற்றால் நாட்டில் 22 வது மரணம் சம்பவித்துள்ளது.
பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 27 வயதான இளைஞர் ஒருவரே உயிரிழந்ததாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த 31 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் உயிரிழந்தார்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் 19 தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் பாணந்துறை பகுதியைச் சேர்ந்தவர் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம் கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு சேவை திணைக்களத்தின் 4 பணியாளர்களுக்கு கொவிட் 19 தொற்றுதி செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவண் விஜயமுனி இதனைத் தெரிவித்துள்ளார்.
அந்த திணைக்களத்தின் 65 பணியாளர்களுக்கு அண்மையில் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அவர்களில் 4 பேருக்கு இவ்வாறு தொற்றுறுதியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் துணை ஊழியர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்றுதியாகியுள்ளது.
அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் கோவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
தொற்றுக்கு உள்ளானவர் தற்போது இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் பணியாற்றும் பகுதியினை கவனத்திற்கு எடுக்கும் போது, மிக சிலருடனேயே தொடர்பில் இருந்துள்ளார்.
சுகாதார பாதுகாப்பு முறைமைகளுக்கு அமைய உரிய பீ.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நிலைமையை கருத்தில் கடந்த சில வாரங்களாக குறைந்த அளவிலான பணியாளர்களே பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், இலங்கை அரசாங்கத்தின் பணிப்புரைக்கு அமைய குறித்த சுகாதார நடவடிக்கைகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருவதாகவும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாளை முதல்; புறக்கோட்டையில் உள்ள மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்படவுள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்களின் இறக்குமதியாளர்களினதும் வர்த்தகர்களினதும் சங்க தலைவர் ஜி. ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நாளை அதிகாலை 5 மணிமுதல் பிற்பகல் 3 மணி வரை மொத்த விற்பனை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, சுகாதார அமைச்சின் ஒழுங்கின் கீழ் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் வைத்தியசாலைகளின் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கு அந்த அமைச்சு தீர்மானித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவுறுத்துதவற்காக சுகாதார அமைச்சரின் தலைமையில் இன்று கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதேநேரம் வடக்கு மாகாணத்தில் கொரோனா தொற்று ஆரம்பமான மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 59 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மார்ச் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் 18 நோயாளர்களும் ஒக்டோபர் மாதத்தில் 41 நோயாளர்களும் அடையாளங்காப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாசையூர் மேற்கு - திருநகர் கிராம சேவகர் பிரிவுகளும் கரவெட்டி - இராஜகிராம் தொடர்;ந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் தெரிவித்தார்.
அத்துடன் அண்மைய நாள்களில் வெளிமாவட்டங்களிலிருந்து வருகை தந்தவர்கள் தங்களைத் தாங்களே வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்குவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுபவர்களின் தேக ஆரோக்கியத்தில் மாற்றம் ஏற்படும்பட்சத்தில் அது குறித்து உடனடியாக மருத்து தரப்பினருக்கு அறிவிக்க வேண்டும் எனவும் வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ஸ் கோரியுள்ளார்.
நாட்டில் நேற்றைய தினம் கொவிட் 19 தொற்றுறுதியான 397 பேரில் அதிகளவானோர் கம்பஹா மாவட்டத்திலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதியில் அந்த மாவட்டத்தில் 179 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
அத்துடன் கொழும்பு மாவட்டத்தில் 93 பேருக்கும், களுத்துறை மாவட்டத்தில் 33 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 19 பேருக்கும், குருணாகல் மாவட்டத்தில் 11 பேருக்கும், மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டத்திலும் தலா 5 பேருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
புத்தளம் மற்றும் காலி மாவட்டங்களில் தலா இரண்டு பேருக்கும், திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை, இரத்தினபுரி, பொலன்னறுவை, மன்னார் மற்றும் அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினம் தலா ஒருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மாத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம் தொடர்ந்து 3 நாட்களாக அதிகளவான கொவிட் 19 தொற்றுறுதியானவர்கள் கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலேயே அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
அந்த பிரிவில் புதிதாக 51 பேரும்;, வத்தளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 39 பேரும், மஹர பகுதியில் 34 பேரும்;, ஹொரணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 33 பேரும், களனி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேரும் நேற்றைய தினம் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, 22 தாதி அதிகாரிகள் உள்ளிட்ட 60 சுகாதார பணிகுழாமினருக்கு இதுவரை கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
சுகாதார தொழிற்சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 300க்கும் அதிகமான சுகாதார பணிகுழாமினர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனை, களுபோவில போதனா மருத்துவமனை, ரிஜ்வே சிமாட்டி, ராகமை, மினுவாங்கொடை, திவுலப்பிட்டி, லக்கல – பல்லேகம, மாத்தளை நாலந்த மற்றும் ஹொரனை ஆகிய மருத்துமனையின் பணிக்குழாமினருக்கே கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
களுபோவில போதனா மருத்துவமனையின் இரண்டு மருத்துவர்கள் உள்ளிட்ட பணிக்குழாமினர் கொவிட் 19 தொற்றுறுதியால் பீடிக்கப்பட்டுள்ளனர்.