வெளியான தகவல்களில் உண்மையில்லை!! அடியோடு நிராகரித்தது கோட்டாபய அரசு

வெளியான தகவல்களில் உண்மையில்லை!! அடியோடு நிராகரித்தது கோட்டாபய அரசு

அமெரிக்காவுடனான எம்.சீ.சீ. உடன்படிக்கை பொதுத் தேர்தலுக்கு பின்னர் கைச்சாத்திடப்படும் என சிலர் தெரிவித்து வரும் தகவல்களில் உண்மையில்லை என அமைச்சரவையின் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் தனியார் மருத்துவக் கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க தயாராகி வருவதாக வெளியாகியுள்ள தகவலிலும் உண்மையில்லை எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் இலங்கையுடனான எம்.சீ.சீ உடன்படிக்கை பொதுத் தேர்தலின் பின்னர் கைச்சாத்திட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம் எம்.சீ.சீ உடன்படிக்கைக்கு எதிராக பாரிய பிரசாரங்களை மேற்கொண்டு கடந்த தேர்தலில் வெற்றி பெற்றது. விமல் வீரவங்ச, உதய கம்மன்பில ஆகியோர் இந்த உடன்படிக்கைக்கு எதிராக கடுமையான பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அனுராதபுரத்திற்கு செல்லவும் அமெரிக்காவிடம் விசா பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர்கள் தெரிவித்திருந்தனர். எனினும் தேர்தலுக்கு பின்னர் கருத்து வெளியிட்டிருந்த உதய கம்மன்பில, எம்.சீ.சீ உடன்படிக்கையில் 70 வீதமானவை சிறந்தது எனவும் 30 வீதமான விடயங்களையே தாம் எதிர்ப்பதாகவும் கூறியிருந்தார்.