
ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 09 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
இதனை தவிர, இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட பொலிஸ் பிரிவு, குருநாகல் நகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிலும் எதிர்வரும் 09ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுலில் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில், பயணங்களை மட்டுப்படுத்துமாறும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
எவரேனும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் பட்சத்தில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படாத ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள், வீடுகளிலிருந்து வௌியேறும் போது கட்டாயம் முகக்கவசத்தை அணிவதுடன் சமூக இடைவௌியை பேணுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவௌியை பேணாமலும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 70 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.