வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறந்திருக்காது...!
மேல் மாகாணத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே மேல் மாகாணத்தில் அமுலாக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 5 மணியுடன் தளர்த்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் மேல் மாகாணத்தில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலியகொடை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய ஆகிய காவல்துறை அதிகார பிரதேசங்களிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாகின்றது.
அதுதவிர குருநாகல் நகர சபை பகுதியிலும் இன்று அதிகாலை 5 மணி முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்கள் திறக்கப்படமாட்டாது என காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கடந்த வாரங்களில் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதால், வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக காவற்துறை பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதேவேளை, இன்று முதல் மறு அறிவித்தல் வரை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான காரியாலத்திற்கு பொது மக்கள் வருகை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்காக கடமை நாட்களில் காலை 8 மணி முதல் பிற்பகல் 4.30 வரை தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்ஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற முடியும் என அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய பிரதேசங்களில் உள்ள செயலகங்கள் அத்தியாவசிய தேவைகளின் போது கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்காக திறக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு கொழும்பு புறக்கோட்டை - மெனிங்சந்தை மறு அறிவிப்பு மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, அரச தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்பத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தில் உள்ள தொழிற்சாலைகளின் பணிகளை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்த தொழிற்சாலைகளின் சேவையாளர்கள் ஊரடங்கு சட்டத்திற்கான அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் முறை தொடர்பில் இலங்கை முதலீட்டு ஊக்குவிப்பு வலையத்தின் இணையத்தளத்திற்கு சென்று பார்வையிடுமாறு கோரப்பட்டுள்ளது.