அமேசான் தளத்தில் விற்பனையாளர்கள் அடையாளம் சரிபார்ப்பு: வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் ஆரம்பம்
கரோனா தொற்றின் எதிரொலியாக, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பவர்களின் அடையாளத்தை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் சரிபார்க்கும் வேலையை அமேசான் தளம் ஆரம்பித்துள்ளது. தற்போது அமெரிக்கா, பிரிட்டன், சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் இந்த சரிபார்க்கும் முயற்சி பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையில் இதுவரை, 1000க்கும் மேற்பட்ட விற்பனையாளர்கள் அமேசானில் பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
இது விரைவில் அமேசான் இருக்கும் அனைத்து நாடுகளிலும் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு, 25 லட்சம் நம்பத்தகாத விற்பனையாளர்களை, தங்கள் தளத்தில் பொருட்களை விற்பதிலிருந்து தடுத்துள்ளதாக அமேசான் கூறியுள்ளது. "சமூக விலகலை நாம் பின்பற்றிக் கொண்டிருக்கும் நேரத்தில், அமேசான் தளத்தின் வருங்கால விற்பனையாளர்களின் அடையாளத்தை வீடியோ மூலம் சரிபார்க்கும் ஒரு பரிசோதனை முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
இதனால் அந்தந்த விற்பனையாளர்களுடன் நேரடியாகப் பேச முடிவதோடு, மோசடி செய்ய நினைப்பவர்கள் ஒளிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது" என அமேசான் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். குறிப்பிட்ட விற்பனையாளருடன் அமேசான் குழு ஒரு வீடியோ கால் உரையாடலை ஏற்பாடு செய்யும். அவர்களின் முகமும், அவர்கள் கொடுத்திருக்கும் ஆவணங்களில் இருக்கும் முகமும் ஒன்றுபோல் இருக்கிறதா என்று சரிபார்க்கப்படும்.
மேலும் அவர்களைப் பற்றிய மற்ற விவரங்களும் சேகரிக்கப்படும். இதோடு, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலமாகவும் குறிப்பிட்ட விற்பனையாளரின் அடையாளத்தைச் சரிபார்க்கும் பணியை அமேசான் செய்கிறது.