உலகின் இருதுருவங்களை கடந்து புதிய சாதனையை படைத்துள்ள பறவை
ஒரேமூச்சில் உலகின் இரு துருவங்களை கடந்துள்ள பறவையொன்று புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
பருவகால மாறுதல்களின் போது தங்களின் வாழ்விடத்தை சில காலம் மாற்றி அமைக்கும் முயற்சியில் பறவைகள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் பறந்து செல்வது வழக்கம். பின்னர் தங்கள் இருப்பிடத்திற்கே திரும்பிச் சென்றுவிடும்.
இவ்வாறு மிக நீண்ட தூரம் இடை நிற்காமல் கடல், மலை தாண்டி பறந்து செல்லும் இயல்பு எப்போதும் ஆச்சரியப்பட வைக்கக்கூடியது. கடந்த 2007ஆம் ஆண்டு பறவை ஒன்று இடை நிற்காமல் 11,680 கிலோமீட்டர் தூரம் பறந்ததே உலக சாதனையாக இருந்தது. இது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
Bar Tailed Godwit எனப்படும் பட்டைவால் மூக்கன் பறவை தான் இத்தகைய சாதனையை படைத்துள்ளது.
கடந்த செப்ரெம்பர் மாதம் 16ஆம் திகதி வட அமெரிக்க கண்டத்தில் உள்ள அலாஸ்காவில் இருந்து பறக்கத் தொடங்கியது. இதையடுத்து 11 நாட்கள் தொடர் பயணத்தை அடுத்து நியூசிலாந்து நாட்டின் ஒக்லாந்து நகரை வந்து சேர்ந்தது. இந்த பயண தூரம் சுமார் 12,200 கிலோமீட்டர் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இந்த பட்டைவால் மூக்கன் பறவை மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் பறந்து சென்றுள்ளது. முன்னதாக இந்த பறவையின் பின்புறத்தில் 5 கிராம் எடையுள்ள செயற்கைக்கோள் டேக் ஒன்றை விஞ்ஞானிகள் பொருத்தியுள்ளனர்.
இதைக் கொண்டு செயற்கைக்கோள் மூலம் பறவையின் பயணத்தை விஞ்ஞானிகள் கண்காணித்ததாக கார்டியன் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த Bar Tailed Godwit பறவைகள் பயணத்தின் போது தம்முடைய உடல் உறுப்புகளை சுருக்கிக் கொள்ளும்.
அப்போது இதன் எடை 190 கிராம் முதல் 400 கிராம் வரை மட்டுமே இருக்கும். இதன்மூலம் வேகமாக பறக்க முடியும் என்று உணர்ந்துள்ளது. இதன் மிக நீண்ட சிறகுகள் மற்றும் வடிவமைப்பானது ஒரு ஜெட் விமானத்தை ஒத்தது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஏரோடைனமிக் தொடர்பான ஆய்வுகளுக்கு இந்த பறவையின் செயல்பாடுகள் பெரிதும் உதவிகரமாக இருப்பதாக சொல்லப்படுகிறது